உள்ளூர் செய்திகள்

இரக்கமாகிய நற்பண்பு

அதிகாலை நேரம். அவசர அவசரமாக பஸ்ஸில் ஏறினான் ரகீம்.அவனுக்கு கால் வலி அடிக்கடி வரும். பஸ்ஸில் ஒரு சில பயணிகளே அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆட்கள் வர ஆரம்பித்தனர். படிக்கட்டு அருகே உள்ள ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த ரகீமை பார்த்த பெரியவர், ''தம்பி வேறு சீட்டில் சென்று அமர்ந்து கொள்கிறாயா. நான் இறங்குவதற்கு இது தான் சரியாக இருக்கும்'' என்றார். வயதானவர் தானே என்றவாறு மற்றொரு சீட்டில் போய் அமர்ந்தான். சிறிது துாரம் சென்ற பிறகு கர்ப்பிணி ஒருத்தி ஏற அவனிடம் வந்து அண்ணா என அழைத்தாள். புரிந்து கொண்ட ரகீம் இடம் கொடுத்துவிட்டு பஸ்ஸின் கடைசி இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் ஒரு மாணவன் புத்தகச்சுமைகளோடு பள்ளிக்கு செல்ல அப்பஸ்ஸில் ஏறினான். அவனிடம் வந்து ''மாமா நான் உட்கார இடம் கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்றான். அவனும் நிலையறிந்து இடம் கொடுத்தான். பின்னர் நின்று கொண்டு பயணமானான். இதையெல்லாம் கவனித்து வந்த கண்டக்டர் ரகீமிற்கு தனது இருக்கையை கொடுத்து அமரச்செய்தார். பிறருக்கு செய்யும் உதவி பன்மடங்காகவும், உடனேயும் பலன் தரும் என அவனது அப்பா சொன்ன வார்த்தை நினைவுக்கு வர மனதிற்குள் மகிழ்ந்தான்.