மனதில் நினைத்தாலும்..
UPDATED : ஆக 04, 2022 | ADDED : ஆக 04, 2022
முல்லாவின் வீட்டில் என்ன சமைத்தாலும், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் அதை மோப்பம் பிடித்து விடுவாள். தனது மகளை அனுப்பி அந்த உணவை வாங்கி வரச்சொல்வாள். இதனால் சங்கடம் அடைந்த அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒருநாள் கோழி சூப் சாப்பிட நினைத்த முல்லா, மனைவியிடம் அதை தயாரிக்கும்படி கூறினார். இருந்தாலும் அந்தப்பெண்ணின் நினைவு வரவே, சூப் வேண்டாம் என்றார். இவர் சொல்லி முடித்த நேரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணின் மகள் கிண்ணத்துடன் வந்து நின்றாள். இதைப் பார்த்தவருக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. மனைவியிடம், ''இந்த அதிசயத்தை பார். இத்தனை காலம் சமையலைத்தான் மோப்பம் பிடித்தாள். இப்போது மனதில் நினைப்பதையே மோப்பம் பிடித்து விட்டாளே' என்றார்.