உனக்கே வெற்றி
இளவரசன் ஒருவன் நபிகள் நாயகத்திடம் சீடனாக ஏற்கும்படி வேண்டினான்.''எங்கிருந்து வருகிறாய்?'' எனக் கேட்டார்.''பக்கத்து நாட்டு இளவரசன். என் பெயர் ஹாரூன்'' என்றான்.'' உன்னையே மறக்கும் அளவுக்கு ஆர்வமுடன் எதிலாவது ஈடுபட்டிருக்கிறாயா'' எனக் கேட்டார்.''சதுரங்க விளையாட்டு தான் மிக பிடிக்கும்'' என்றான்.தமது சீடர்களில் ஒருவரை சதுரங்க அட்டையுடன் வரும்படி கூறினார். வந்த சீடருக்கு விளையாடத் தெரிந்தாலும், அதன் நுணுக்கங்கள் தெரியாது. இந்நிலையில் '' போட்டியில் நீ தோற்றால் எனது சீடனாக தொடர முடியாது'' என அதிர்ச்சியளித்தார் நாயகம்.இளவரசனிடம், ''நீ தோற்றால் சீடனாக உன்னை ஏற்க முடியாது'' எனவும் தெரிவித்தார்.போட்டியில் இளவரசன் அருமையாக விளையாடவே அவனது வெற்றி நிச்சயமாகி விட்டது. இந்நிலையில் இளவரசன் நிமிர்ந்து பார்த்தபோது, சீடர் இயல்பாக இருந்தார். அவரது முகம் மலர் போல காட்சியளித்தது. இந்த நல்ல மனிதரின் இறைப்பயணம் வீணாகி விடுமே என வருந்தினான். தோற்றால் நாயகத்தின் சீடராக தொடர மாட்டாரே என்பதால் அவர் மீது கருணை உண்டானது. வேண்டுமென்றே காய்களை தவறாக நகர்த்த தொடங்கினான்.அப்போது ஆட்டத்தை கலைத்துவிட்டு, ''இருவருமே வென்று விட்டீர்கள்'' என்று சிரித்தார் நாயகம். மேலும் இளவரசனிடம், ''மகனே உனக்கே வெற்றி. நீ பெற்ற வெற்றி இந்த சீடரின் வெற்றியை விடப் பெரியது. இப்போதே உன்னை சீடனாக ஏற்கிறேன்'' என தெரிவித்தார். பலன் கருதாமல் தியாகம் செய்யும் மனிதனே கருணை மிக்கவன். பரிசுத்தமான எண்ணத்தின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறிவிடும்.