உள்ளூர் செய்திகள்

முகமலர்ச்சியுடன் பேசுங்கள்

தான் வாழ்ந்த ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்தது தர்மசத்திரம். அங்கு தங்க வருபவர்களுக்கு சரியான உபசரிப்பு இல்லை என்ற புகாரை பொதுநல விரும்பியான முல்லாவிடம் கொடுத்தனர். அவர்களை திருத்த நினைத்தார் முல்லா. அங்கு சென்று பணியாளர்களிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக்கேட்டார். யாரும் அவரை கண்டு கொள்ளவே இல்லை. மீண்டும், மீண்டும் தண்ணீர் கேட்ட முல்லாவிற்கு இவர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என யோசித்தார். பின்னர், ஐயோ! நெருப்பு பற்றி எரிகிறதே, நெருப்பு, நெருப்பு எனக்குரல் கொடுத்தார். இந்த சப்தத்தை கேட்ட பணியாளர்கள் தண்ணீரோடு வந்தனர். நெருப்பு எங்கே என அவர்கள் கேட்ட போது என் வயிற்றில் எனக்கூறிய முல்லா தண்ணீரை வாங்கிக் குடித்தார். ''எதனையும் அலட்சியம் செய்தால் பெயர் கெட்டுப்போகும். இங்கு வரும் மக்களிடம் இனிய வார்த்தைகளை பேசி அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள் புகழ் பரவும்'' என அறிவுரை கூறினார். அவர்களும் கேட்டுக் கொண்டார்கள். நாளடைவில் சத்திரத்தின் புகழ் பரவத்தொடங்கியது.