சில உரிமைகள் உண்டு
அந்த மூன்று தோழர்களும் நபிகள் நாயகம் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் இல்லை. அவரது மனைவி ஆயிஷா இருந்தார். அவரிடம், ''வழிபாட்டு முறைகள் என்னென்ன? அதைப்பற்றி எங்களுக்குச் சொன்னால் உதவியாக இருக்கும்'' என தோழர்கள் கேட்டனர். ''அவர் ஐவேளைத் தொழுகையை தவறாமல் நிறைவேற்றுவார். ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்பார்'' என்றார். இதைக்கேட்டதும் தோழர்கள், 'அவர் செய்யும் வழிபாடு குறைவாக உள்ளதே' என ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அவர்கள் தங்களுக்குள், 'வாழ்நாள் முழுவதும் பகல் நேரத்தில் தொடர்ந்து நோன்பு வைப்பேன், ஒவ்வொரு நாளும் இரவு முழுக்க இறைவணக்கத்தில் ஈடுபடுவேன், ஆசைகளை துறப்பேன்' என பேசிக்கொண்டனர். அங்கு வந்த நபிகள் நாயகம், 'அப்படிச் செய்யாதீர்கள். உங்களது கண்கள், உடலுக்கு சில உரிமைகள் உண்டு. உங்களைச் சந்திக்க வருபவர்கள், விருந்தாளிகளுக்கும் உரிமைகள் உண்டு. அதை நீங்கள் நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். வழிபாட்டில் அதிக ஆர்வம் இருந்தால் மாதத்திற்கு மூன்று நாள்கள் நோன்பு இருங்கள்'' என்றார்.