உள்ளூர் செய்திகள்

அக்கம் பக்கம்

தலைமறைவாக வாழும் சபாநாயகர்!

சட்டசபை சபாநாயகராக பதவி வகிக்கும் ஒருவர், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன் வேறு யாருமில்லை; ஆந்திர சபாநாயகர் நதெந்துலா மனோகர் தான். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி, தெலுங்கானா பகுதியின் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த, நூறு எம்.எல். ஏ.,க்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களை அளித்துள்ளனர். ஆனால், சபாநாயகர் மனோகர், 'எம்.எல்.ஏ.,க்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அளித்துள்ள, இந்த ராஜினாமாக்களை ஏற்க முடியாது' என, திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆனால், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களோ, 'ராஜினாமாவை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இல்லையெனில், மீண்டும், மீண்டும் எங்களின் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைப்போம்' என, பிடிவாதமாக இருக்கின்றனர். சபாநாயகர் இருக்கும் இடத்துக்கே தேடி வந்து, ராஜினாமாவை ஏற்கும்படி, அவருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால், ஆந்திராவில் தலைகாட்டுவதற்கே, சபாநாயகர் மனோகர் தயக்கம் காட்டி வருகிறார். ஒவ்வொரு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார். மாதத்தில், ஓரிரு நாட்கள் ஆந்திரா பக்கம் தலை காட்டினாலும், தான் இருக்கும் இடத்தை, மிகவும் ரகசியமாகவே வைத்துக் கொள்கிறார். 'என்ன பிழைப்பு இது... சபாநாயகர் என்ற உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, தலைமறைவு குற்றவாளி போல, வாழ வேண்டியிருக்கிறதே' என, தன் உறவினர்களிடம், சபாநாயகர் மனோகர் புலம்பி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !