| ADDED : மே 12, 2024 11:29 PM
'மொத்த தொகுதிகளிலும், அவர்களது குடும்பத்தினரே போட்டியிட்டால் நாங்கள் என்ன செய்வது...' என புலம்புகின்றனர், உத்தர பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர். இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளது.'தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், சமாஜ்வாதி கட்சி காணாமல் போய் விடும்...' என, இங்குள்ள மூத்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் பணம் படைத்த, செல்வாக்கானவர்களை நிறுத்தியுள்ளார் அகிலேஷ் யாதவ். கட்சிக்காக காலம் முழுதும் வியர்வை சிந்தி உழைத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதிலும், ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தன் குடும்பத்தினரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் அகிலேஷ். மெயின்புரி தொகுதியில் தன் மனைவி டிம்பிள், பெரோசாபாத் தொகுதியில் தன் சித்தப்பா மகன் ஆகாஷ் ஆனந்தை வேட்பாளராக அறிவித்து உள்ளார். பாடவுன் தொகுதியில், தன் மற்றொரு சித்தப்பா மகன் ஆதித்யா, அசாம்காரில், மற்றொரு உறவினரான தர்மேந்திரா யாதவ் ஆகியோரை நிறுத்தியுள்ளார். இதனால் வெறுத்து போயுள்ள கட்சி நிர்வாகிகள், 'போஸ்டர் ஒட்டுவதற்கு, பிரசாரம் செய்வதற்கு மட்டும் நாங்கள் வேண்டும். தேர்தலில் நிற்பதற்கு மட்டும் உறவினர்கள் வேண்டுமா? எப்படி ஜெயிக்கின்றனர் என பார்த்து விடலாம்...' என்கின்றனர்.