'பாவம்; இதை நினைத்தாவது அவர் சந்தோஷப்படட்டும்...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை கிண்டலடிக்கின்றனர், பா.ஜ.,வினர். கார்கே நீண்ட நாட்களாகவே மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக பிரபலமான மருத்துவனைகளில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. இதற்கிடையே, லோக்சபா தேர்தலுக்காக நாடு முழுதும் சுற்றிச் சுற்றி பிரசாரம் செய்தார். இதனால், அவரது மூட்டு வலி அதிகரித்து, நடக்க முடியாத அளவுக்கு பிரச்னையாகி விட்டது. இதையடுத்து, கேரளாவுக்கு சென்ற அவர், அங்கு பிரபலமான ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சேர்ந்து, தீவிரமாக சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, 10 நாட்கள் சிகிச்சை பெற்ற பின், சற்று நிவாரணம் ஏற்பட்டது; வலி ஓரளவு குறைந்தது. சிகிச்சை முடிந்ததும், கார்கேவுக்கு, அந்த ஆயுர்வேத மையம் சார்பில், 'நெற்றிப்பட்டம்' என்ற நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது. கோவில் விழாக்களில் பங்கேற்கும் யானைகளின் நெற்றியில்கட்டப்படும், ஒரு வகை ஆபரணம் தான், இந்த நெற்றிப்பட்டம். இதைப் பார்த்ததும், கார்கேவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மிகப் பெரிய விருது பெற்றது போல் மகிழ்ந்த அவர், அந்த நெற்றிப்பட்டத்தை மேலும் கீழும் துாக்கி, நீண்ட நேரம் அதையேபார்த்துக் கொண்டிருந்தார். இதைக்கேள்விப்பட்ட பா.ஜ.,வினர், 'லோக்சபா தேர்தல் முடிந்ததும், பிரதமர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்; அது நடக்கவில்லை. இப்போதைக்கு இதாவது கிடைத்ததே... அதனால் தான் இந்த சந்தோஷம்...' என, கிண்டலடிக்கின்றனர்.