| ADDED : ஏப் 11, 2024 09:14 PM
'இந்த முறையாவது இவருக்கு வெற்றி கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்...' என, பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி குறித்து கூறுகின்றனர், கேரள மக்கள்.இங்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. நாட்டிலேயே பா.ஜ.,வுக்கு மிகவும் சவாலான மாநிலங்கள் கேரளாவும், தமிழகமும் தான். இந்த இரண்டு மாநிலங்களிலும் எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பா.ஜ., தலைவர்கள் பணியாற்றினாலும், அது தொடர்ந்து எட்டாக்கனியாகவே உள்ளது. மலையாளத்தில் பிரபல நடிகரான சுரேஷ் கோபி, கடந்த லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். 'மற்ற தொகுதிகளில் வெற்றி பெற முடியாவிட்டாலும், சுரேஷ் கோபிக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தால் வெற்றி சாத்தியமாகி விடும்...' என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், அவரால் மூன்றாவது இடத்தைத் தான் பிடிக்க முடிந்தது. சற்றும் மனம் தளராத சுரேஷ் கோபி, இந்த முறையும் திருச்சூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.அவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை திருச்சூருக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். 'பிரதமரின் பிரசாரமும், சுரேஷ் கோபியின் செல்வாக்கும் இந்த முறை திருச்சூரில் நிச்சயம் எங்களை கரை சேர்த்து விடும்...' என, நம்பிக்கையுடன் உள்ளனர், பா.ஜ.,வினர்.