உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / சிறந்த அரசியல்வாதி ஆவார்!

சிறந்த அரசியல்வாதி ஆவார்!

'மக்களுக்கு எது பிடிக்கும் என நன்றாகவே தெரிந்து வைத்து, அதற்கேற்ப தான் செயல்படுகிறார்...' என, ஒடிசா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் சரண் மஜி பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள். ஒடிசாவில் நீண்ட காலமாக பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் தான் முதல்வராகஇருந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ஒடியா மொழிக்கு முக்கியத்துவம் அளித்து பா.ஜ., பிரசாரம் செய்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மோகன் சரண் மஜி முதல்வராக பதவியேற்றார். 'எந்தவிதமான நிர்வாக அனுபவமும் இல்லாதவரை முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ளனரே... இவரால் சமாளிக்க முடியுமா...' என, பலரும் முணுமுணுத்தனர். இந்த விவகாரத்தில் மோகன் மஜி தெளிவாகவே உள்ளார். எந்த விஷயத்தை முன்வைத்து பா.ஜ., ஆட்சியை பிடித்ததோ, அது தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். 'அரசு அலுவலகங்களில் இனி அதிகாரப்பூர்வ தகவல் பறிமாற்றம் ஒடியா மொழியில் தான் இருக்க வேண்டும். ஒடியா சாகித்ய அகாடமி சீரமைக்கப்படும். ஒடியா மொழியை மேலும் பிரபலப்படுத்த பிரமாண்ட திட்டம் தீட்டப்படும்...' என, வரிசையாக மொழி சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 'மோகன் சரண் மஜி, எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக உருவெடுத்து விடுவார்...' என்கின்றனர், இங்குள்ள மூத்த தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி