'தேர்தலில் தோற்றாலும் பதவி கொடுத்து, ஆறுதல் தெரிவிப்பது நம் கட்சி தான்...' என பெருமிதத்துடன் கூறுகின்றனர், கேரளாவில் உள்ள பா.ஜ., நிர்வாகிகள். இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி ஒரு அணியாகவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டன.பா.ஜ.,வும் களத்தில் இறங்கியதால், மும்முனை போட்டி நிலவியது. முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பா.ஜ.,வில் சேர்ந்ததை அடுத்து, அவரை பத்தினம்திட்டா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியது பா.ஜ., மேலிடம். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், திருச்சூரில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். அனில் அந்தோணி தோல்வியை தழுவினார். 'இனி பா.ஜ.,வில் அனில் அந்தோணி ஓரம் கட்டப்படுவார்...' என, அனைவரும் நினைத்தனர். ஆனால் அவரை, வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளராக நியமித்தது, பா.ஜ., தலைமை.இந்த இரண்டு மாநிலங்களிலும் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால், அந்த மதத்தைச் சேர்ந்த அனில் அந்தோணிக்கு அங்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அனில் அந்தோணியின் ஆதரவாளர்களோ, 'நம்ம தலைவருக்கு இன்னும் பெரிய பதவிகள் தேடி வரப்போகின்றன...' என, குதுாகலிக்கின்றனர்.