| ADDED : மே 03, 2024 09:35 PM
'இதையெல்லாம் பார்த்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை...' என விரக்தியுடன் கூறுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன். லோக்சபா தேர்தல் முடிந்த நிம்மதி அவரிடம் இருந்தாலும், அவரது முகத்தில் ஒரு இனம் புரியாத சோகம் படிந்துள்ளது. இது பற்றி கேட்டால், மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை கொட்டி தீர்க்கிறார். கடந்த ஒரு ஆண்டாகவே பினராயி விஜயனுக்கும், 'மைக்'கிற்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.முன்னாள் முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, மறைந்த உம்மன் சாண்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஜயன் பங்கேற்றார்.அப்போது அவர் பேசும்போது, மைக் தகராறு செய்தது. அது மட்டுமல்லாமல், நாய் ஊளையிடுவது போன்ற சத்தம், மைக்கில் இருந்து வந்தது. அதிர்ச்சி அடைந்த விஜயன், பாதியிலேயே பேச்சை முடித்து விட்டார். அந்த மைக் செட் ஆப்பரேட்டர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தது தனிக் கதை. கடந்த மாதம் கோட்டயத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோதும், மைக் கோளாறு ஏற்பட்டு, விஜயன் பேசியது சரியாக கேட்காமல் போனது. இதனால், அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றார். அடுத்த சில நாளில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசாரம் செய்தபோதும், மைக் வேலை செய்யவில்லை. வேறு ஒரு மைக் ஏற்பாடு செய்தபோதும், அதுவும் தகராறு செய்தது. இதனால் வெறுத்துப் போன விஜயன், 'மைக்கிற்கும், எனக்கும் அப்படி என்ன பங்காளி தகராறு என்று தெரியவில்லை...' என, புலம்புகிறார்.