| ADDED : ஜூன் 12, 2024 09:13 PM
'ஆளும் கட்சியாக இருந்து என்ன பயன்; தோல்விகள் தொடர்கின்றனவே...' என கவலைப்படுகின்றனர், கேரளாவில் உள்ள இடதுசாரி கட்சியினர். இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, பினராயி விஜயன், முதல்வர் பதவியை தக்க வைத்தாலும், லோக்சபா தேர்தல்கள், அவரை பாடாய் படுத்துகின்றன.கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தம் உள்ள, 20 தொகுதிகளில், 19 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. ஆளும் கட்சி கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் வயநாடு தொகுதியில் காங்கிரசின் ராகுல் போட்டியிட்டதால், அவருக்கு ஆதரவாக வீசிய அலையில் தோல்வியை தழுவியதாக, பினராயி விஜயன் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால், இந்த தேர்தலிலும் இடதுசாரிகூட்டணிக்கு ஒரு தொகுதி தான் கிடைத்தது. காங்கிரஸ் கூட்டணி, 18 தொகுதிகளிலும், பா.ஜ., ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. 'கடந்த முறை ராகுல், கடைசி நேரத்தில் வயநாட்டில் போட்டியிட்டதால் தோல்வி அடைந்ததாக பினராயி காரணம் கூறினார். இந்த முறை என்ன காரணத்தை கூறப்போகிறார்...' என, மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ள பினராயி விஜயன் எதிரணியினர் கேள்வி எழுப்புகின்றனர். 'இந்த முறை வேறு காரணத்தை பினராயி விஜயன் தேடிக்கொண்டிருக்கிறார்...' என கிண்டலடிக்கின்றனர், அவரது அரசியல் எதிரிகள்.