'சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், பழைய நண்பர்கள் பலரை ஒன்று சேர்த்து விட்டது...' என, நகைச்சுவையாக பேசுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள். முன்னாள் மத்திய அமைச்சர், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், தற்போது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக உள்ளார். பீஹாரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது மோடி அரசில், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக உள்ளார். இவர், அரசியலுக்கு வருவதற்கு முன் பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சித்தார். கடந்த 2011ல், மிலே நா, மிலே ஹம் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். இதில், அவருக்கு ஜோடியாக நடித்தது, கங்கனா ரணாவத். அந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, சினிமா ஆசையை மூட்டை கட்டி விட்டு, முழு நேர அரசியலுக்கு வந்து விட்டார், சிராக். ஆனால், அவருடன் நடித்த கங்கனா, பல வெற்றி படங்களில் நடித்து, பிரபலமான நடிகையாகி விட்டார். லோக்சபா தேர்தலில், ஹிமாச்சல் மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கங்கனா, சமீபத்தில் பார்லிமென்டிற்கு வந்திருந்தார். அங்கு சிராக்கும் வந்திருந்தார்.இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். புகைப்படத்துக்கும் விதம் விதமாக போஸ் கொடுத்து அசத்தினர். 'சினிமாவில் பிரிந்த இருவரையும், அரசியல் ஒன்று சேர்த்து விட்டது...' என, கிண்டலடித்தனர், சக அரசியல்வாதிகள்.