'இந்த தேர்தலில் நாம் ஜெயிக்காவிட்டால்,ஒட்டுமொத்தமாக ஜெயிலில் களி தின்ன வேண்டியிருக்கும்...' என மிரட்டி, தன் கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.கடந்த சட்டசபை தேர்தலில், அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு, இந்த தேர்தல் பெரிய சோதனைக் களமாக அமைந்துள்ளது.ஆந்திராவில், தற்போது லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. கடைசி நேரம் வரை, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க கடுமையாக முயற்சித்து வந்தார், ஜெகன். ஆனால், பா.ஜ., தலைவர்கள் எந்த பதிலும் கூறாமல் இழுத்தடித்து வந்தனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியை பா.ஜ., உறுதி செய்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெகன்மோகன் ரெட்டி, அதிர்ச்சி அடைந்தார். சில மாதங்களுக்கு முன் வரை, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது, தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, சிறையில் அடைத்து ரசித்தார் ஜெகன்மோகன். இந்த கோபம், சந்திரபாபு நாயுடுவிடம் இன்னும் எரிமலையாக எரிகிறது.இதனால் தற்போதைய தேர்தலில் தோற்று, சந்திரபாபு நாயுடுவிடம் ஆட்சியை பறிகொடுத்தால், தன்னை, அவர் சிறையில் அடைத்து விடுவார், என்ற கலக்கத்தில் உள்ளார், ஜெகன். 'இரவு பகல் பாராமல் உழைத்து தேர்தல் பணியாற்றினால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சொகுசு வாழ்க்கை வாழலாம். இல்லையெனில், சிறையில் கம்பி எண்ணுவதை தவிர வேறு வழியில்லை...' என, தன் கட்சி நிர்வாகிகளிடம் கலக்கத்துடன் கூறியுள்ளார், ஜெகன்.