உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘தாக்குப்பிடிக்க முடியுமா?’

‘தாக்குப்பிடிக்க முடியுமா?’

‘இப்படிப்பட்டவர்களை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு என்ன செய்வது...?’ என, தன் கட்சியினரை நினைத்து புலம்புகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே. சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும், கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல், பொது வெளியில் அநாகரிகமாக செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இதில், அந்த கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.,வான சஞ்சய் கெய்க்வாட்டும் ஒருவர். இவர் ஏற்கனவே, ‘காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுலின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு வழங்குவேன்...’ என அறிவித்து, சர்ச்சையை கிளப்பினார். மற்றொரு சம்பவத்தில், ‘உணவு சரியில்லை’ எனக் கூறி, ‘கேன்டீன்’ உரிமையாளரை தாக்கினார். இந்நிலையில், சமீபகாலமாக மஹாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவுகிறது. மழையின்றி பயிர்கள் கருகுவதால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது குறித்து பேசிய சஞ்சய் கெய்க்வாட், ‘இனிமேல் விவசாயிகள் யாராவது தற்கொலை செய்தால், அவர்களது இறுதிச் சடங்கில் யாரும் பங்கேற்காதீர்கள். அவர்களது சடலங்களை விலங்குகள் சாப்பிடட்டும். அப்போது தான், மற்ற விவசாயிகளுக்கு புத்தி வரும்; தற்கொலை செய்ய மாட்டார்கள்...’ என்றார். அவரது பேச்சுக்கு மஹாராஷ்டிரா முழுதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ‘இந்த ஆளை கட்சியில் இருந்து நீக்கினால் தான், அரசியலில் நாம் தாக்குப்பிடிக்க முடியும் போலிருக்கிறது...’ என எரிச்சலுடன் கூறுகிறார், ஏக்நாத் ஷிண்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ