'சரியாக திட்டமிட்டு, வேண்டுமென்றே பழிவாங்கி விட்டனர்...' என கண்ணீர் வடிக்கிறார், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்.'உங்களுக்கு வயதாகி விட்டது. தேசிய அளவில் பெரிய பொறுப்பு தருகிறோம். மாநில அரசியலில் இளைய தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்குங்கள். உங்கள் பிடிவாதத்தால், பல இளைஞர்கள் கட்சியை விட்டு சென்று விட்டனர்...' என, சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, காங்., மேலிட தலைவர்கள் கமல்நாத்திடம் பலமுறை கெஞ்சிப் பார்த்தனர். ஆனால், அவர் தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. 'தேசிய அரசியல் எனக்கு சரியாக வராது...' என கறாராக கூறி விட்டார். இதனால் கடுப்பான காங்., தலைவர்கள், ம.பி., சட்டசபை தேர்தலில் அடக்கி வாசித்தனர். வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம், செலவு உள்ளிட்ட விஷயங்களை கமல்நாத்திடமே கொடுத்து விட்டு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.ராகுல், பிரியங்கா ஆகியோரும், மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில், எதிர்பார்த்தது போலவே, தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. கமல்நாத்திடமிருந்து, கட்சியின் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு விட்டது.இதனால், கடும் கோபத்தில் உள்ள கமல்நாத், 'தோல்விக்கு என் மீது மட்டும் பழி சுமத்துவது எந்த வகையில் நியாயம்...' என, ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்.