'ஒரு காலத்தில் எப்படி இருந்தவர், இப்போது இப்படி ஆகி விட்டாரே...' என தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவைப் பற்றி கவலைப்படுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ்ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், சந்திரசேகர ராவ் கட்சி தோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தது. அதன்பின், வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து, அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. தற்போது தான் குணமடைந்துள்ளார். அதற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த பல நிர்வாகிகள், காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு ஓடி விட்டனர். லோக்சபா தேர்தல் வேறு வந்து விட்டது. மூத்த நிர்வாகிகள் பலரும், தேர்தலில் போட்டியிட தயங்கி ஒதுங்குகின்றனர். சந்திரசேகர ராவே, அவர்களிடம் நேரில் பேசினாலும், 'இப்போது பண கஷ்டமாக இருக்கிறது. அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் தலைவரே...' என, ஓட்டம் பிடிக்கின்றனர். இதனால் எரிச்சல் அடைந்துள்ள சந்திரசேகர ராவ், 'கட்சியை வைத்து சம்பாதித்தவர்கள் எல்லாம் ஓடுகின்றனர். ஆனாலும், எல்லா தொகுதியிலும் புதுமுகங்களை நிறுத்தி வெற்றி பெற வைப்பேன்...' என, சபதம் எடுத்துள்ளார். தெலுங்கானா மக்களோ, 'பிரதமர் பதவி கனவுடன் வலம் வந்தவர், இப்போது வேட்பாளருக்கு ஆள் கிடைக்காமல் பரிதவிப்பதை பார்த்தால், பரிதாபமாகத் தான் இருக்கிறது...' என்கின்றனர்.