உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / மத்திய அமைச்சர் பதவி ரெடி!

மத்திய அமைச்சர் பதவி ரெடி!

'இப்போது தான் இவரது முகத்தில் சந்தோஷ களையை பார்க்க முடிகிறது...' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகானை பற்றி பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.இங்கு, முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் சிவ்ராஜ் சிங் சவுகான். மத்திய பிரதேசத்தில், நீண்ட காலம் முதல்வராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. இதனால், தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்; ஆனால், கிடைக்கவில்லை. இதனால், கடந்த சில மாதங்களாகவே விரக்தியுடன் வலம் வந்தார். தன் ஆதரவாளர்களை சந்திக்கும் போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். 'பாவம்பா; இந்த மனிதர்...' என, பலரும் அவருக்காக பரிதாபப்பட்டனர். இந்த நிலையில் தான், லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., வேட்பாளர் பட்டியலில், ம.பி.,யின் விதீஷா தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளது, கட்சி மேலிடம். இதனால், பா.ஜ., மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தால், தனக்கு கட்டாயம் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், சந்தோஷமாக வலம் வருகிறார், சிவ்ராஜ் சிங் சவுகான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ