| ADDED : ஜன 01, 2026 01:18 AM
'இப்படித்தான் இந்த செய்தியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்று மக்களிடம் கருத்து திணிக்காது, உள்ளதை உள்ளபடி சொல்லும் மக்கள் நாளிதழ் தினமலர். 'உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் விரும்பி வாசிக்கும் இந்த உண்மை நாளிதழுக்கு நானும் ஒரு வாசகர் என்பதில் எப்போதும் எனக்கு மிகுந்த பெருமை உண்டு! 'இந்த பகுதியில் வாழ வேண்டும்; இந்த கல்வி நிறுவனத்தில் பயில வேண்டும்; இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்' எனும் மதிப்பிற்குரிய விருப்பப் பட்டியலில், 'தினமலர் வாசிக்க வேண்டும்' என்று உலகெங்கிலும் உள்ள தமிழ் உள்ளங்கள் விரும்புவதுதான், இந்த 74 ஆண்டுகால அர்த்தமுள்ள பயணத்தில் தினமலர் நாளிதழின் மதிப்புமிகு சாதனை! இந்த பவள விழா தருணத்தில் நான் எண்ணிப் பார்க்கிறேன். டிஜிட்டல் தாக்கம் அதீதத்திற்கும் அதிகமாகி விட்டது; எது உண்மை, எது பொய் என அறியமுடியா வண்ணம் மக்களை அதன் வீச்சு கடுமையாய் குழப்புகிறது. உண்மை சொல்வதாக சொல்லும் ஊடகங்கள் சில, சார்பு நிலைகளில் தீவிரமாய் இயங்கும் இன்றைய சூழலில், நுாற்றாண்டை நோக்கி நடைபோடும் தினமலர், இளம் வாசகர்களை தன்பக்கம் அதிகமாய் ஈர்க்கும் என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு, உண்மைகளை எளிமையாய் நடுநிலையாய் மக்களிடம் கொண்டு சேர்க்கும் தினமலர் நாளிதழின் எழுத்து நடை மிக முக்கிய காரணம். 'எதைச் சொல்வது என்பது அறிவு: எப்படிச் சொல்வது என்பது உத்தி' என்பார்கள். அந்த உத்தியை தினமலர் ஆசிரியர் குழு நன்கு அறிந்திருக்கிறது என்பது என் வாசக அனுபவம். தினமலர் பேசும் அரசியல் செய்திகளில் ஒவ்வொரு நாளும் ஆத்மார்த்தமாய் இதை நான் உணர்கிறேன். 'எந்த ஒரு கட்சியோடும் நீ சம்பந்தப்பட்டவனாக இல்லாது இருக்கலாம். ஆனால், உன் வாழ்வை சுற்றிலும் நிகழும் அரசியலை நீ அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த அறிவை நீ ஏற்றுக்கொள்ளும்படி தினமலர் உனக்கு ஊட்டும்!' 'ஏன் நீ தினமலர் வாசிக்கிறாய்?' என்ற கேள்விக்கு பெரும்பான்மையோர் அன்றும் இன்றும் சொல்லும் பதில் இது! டீ கடை பெஞ்ச் - இப்பகுதியை, அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தின் பிணி களையும் மருத்துவர் என்று நான் சொன்னால், மறுப்பவர்களே இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். டி.வி.ஆர்., விதைத்த இந்த விருட்சத்தின் பவள விழா தருணத்தில் வாழ்த்து சொல்லும் வாய்ப்பு தமிழ் நேசிக்கும் எனக்கு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்! ஆம்...எங்கள் நறுவீ குழுமம் தமிழை நேசிக்கிறது; தமிழர்களை நேசிக்கிறது; தமிழ் மண்ணை நேசிக்கும் இந்தியர்களை நேசிக்கிறது; இந்தியர்களை உலகரங்கில் உயர்த்தும் ஆளுமைகளை நேசிக்கிறது; தமிழுக்கு இணையாய் இந்திய மண்ணை நேசிக்கும் தினமலர் எனும் தேசிய தமிழ் நாளிதழை நேசிக்கிறது. 'என்னிடம் இல்லாதது எதுவும் இல்லை' என தினமலர் காட்டுவது கம்பீரம். இந்த கம்பீரத்திற்கு வாழ்த்து சொல்வதை விட வியப்பதே உரிய மரியாதையாக இருக்கும். நான் வியக்கிறேன். அன்றாடம் விருப்பப்பட்டு வியக்கிறேன். அன்புடன், - ஜி.வி. சம்பத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், நறுவீ மருத்துவமனை