உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அன்று காட்டு யானைகள்; இன்று விரட்டும் கும்கி கூடலுாரில் யானைகளால் சுவாரஸ்யம்

அன்று காட்டு யானைகள்; இன்று விரட்டும் கும்கி கூடலுாரில் யானைகளால் சுவாரஸ்யம்

கூடலூர்;மக்களை தாக்கி கொன்ற, இரண்டு காட்டு யானைகள், 'இன்று' மக்களை பாதுகாக்க முதுமலை 'கும்கி' யானைகளாக மாறி காட்டு யானைகளை விரட்ட வனத்துறைக்கு உதவி வருகிறது.நீலகிரி மாவட்டம், கூடலூர் தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஏழு காட்டு யானைகள் முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்த யானைகளை வனத்துறையினர் வனத்திற்கு விரட்டினாலும், மீண்டும் அதே பகுதியில் சுற்றித்திரிந்து போக்கு காட்டி வந்தது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கடந்த மாதம், 24ம் தேதி 'கும்கி' யானைகள் சீனிவாசன், 23, 'சேரம்பாடி' சங்கர், 38 ஆகிய 'கும்கி' யானைகளை தொரப்பள்ளி பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறைக்கு உதவி வருகிறது.

வனத்துறைக்கு உதவும் 'கும்கி'கள்

முதல் முறையாக காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள, இரு 'கும்கி' யானைகளும், பந்தலூர், சேரம்பாடி வனங்களில் ஒன்றாக உலா வந்த காட்டு யானைகளாகும். 'அன்று' இந்த யானைகள், அப்பகுதியில் சிலரை தாக்கி கொன்று, மக்களை அச்சுறுத்தி வந்தது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, 'கும்கி' யானை சீனிவாசனை 2016ம் ஆண்டிலும், சேரம்பாடி சங்கரை 2021 ம் ஆண்டிலும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்தனர். அவைகள் வளர்ப்பு யானையாக மாற்றி தொடர் பயிற்சி அளித்து, 'கும்கி' யானைகளாக மாற்றினர். தற்போது, இரு யானைகளும் 'கும்கி' பணிகளை துவங்கி உள்ளது.

நண்பர்களாக உலா

'அன்று' மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானைகள், தற்போது, முதல்முறையாக காட்டு யானைகளை விரட்டி, மக்களை பாதுகாக்க வனத்துறைக்கு உதவியாக களம் இறங்கியுள்ளது.இந்த யானைகள் வனத்தில் இருந்தது போல், இங்கு நண்பர்களாக ஒன்றோடு ஒன்று பழகி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'இந்த இரு 'கும்கி' யானைகளும் பந்தலுார், சேரம்பாடி பகுதியில் ஒன்றாக உலா வந்தது. இவைகள், வெவ்வேறு ஆண்டுகளில் பிடித்து முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது. 'கும்கி' பயிற்சிக்கு பின் முதல்முறையாக காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் இவைகள் இணைந்துள்ளது. இந்த யானைகள், பழைய ஞாபகத்தில் இன்றும் முகாமிலும் ஒன்றாகவே இணைந்து நண்பர்களாக உலா வருவது ஆச்சரியமாக உள்ளது. இதன்மூலம், யானைகளுக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது என்பதை உணர முடிகிறது.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை