UPDATED : டிச 03, 2025 05:16 AM | ADDED : டிச 03, 2025 05:11 AM
பல்லடம்: மதுக்கூடத்தில் நுழைந்து, முறைகேடாக நடந்த மது விற்பனையை தடுத்த பா.ஜ., பெண் கவுன்சிலருடன், ஊழியர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடுகபாளையம் புதுாரில் உள்ள டாஸ்மாக் கடை மதுக்கூடம், நேற்று காலை, 10:00 மணிக்கு திறந்திருப்பதை கண்ட நகராட்சி, 18வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சசிரேகா, மதுக்கூடத்தை முற்றுகையிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த பல்லடம் போலீசார், ஊழியர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, விற்பனைக்காக வைத்திருந்த, 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஊழியர்கள் இருவரை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கவுன்சிலர் சசிரேகா கூறுகையில், ''மதுக்கூடத்தில் காலையிலேயே விற்பனை ஜரூராக நடந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டதும், பெண் என்றும் பாராமல் என்னிடம் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.