பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரண்டு மாதங்களுக்கு முன், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில், கடன் பிரச்னையால் லிங்கம் என்பவர் துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு கடன் கொடுத்த சிலரது பெயரையும் கூறி, அவர்களின் மிரட்டலால் தான், தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருந்தார்.அப்போதே போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்காததால், இப்போது லிங்கம் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், தற்கொலை செய்துள்ளனர். இப்போது, அதாவது அவர்களின் மரணத்திற்கு பிறகு, அவர்களை தற்கொலைக்குத் துாண்டியதாக, வட்டிக்கு பணம் கொடுத்த ஆறு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். இதே நடவடிக்கையை முன்பே எடுத்திருந்தால், ஐந்து உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.'போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பே இல்லை' என, சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருந்தது; அது உண்மைதான்.கஞ்சா விற்பனை மட்டுமல்ல; ஒரு காவல்நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், மீட்டர் வட்டிக்குபணம் கொடுப்பவர்கள், கள்ளச்சாராயம்விற்பவர்கள், போதைப் பொருட்கள் விற்பவர்கள், மணல் கடத்துபவர்கள்,ரவுடிகள், திருடர்கள் போன்ற தவறுகள் செய்யும் அனைவரையும் போலீசாருக்குத் தெரிந்திருக்கும்.லஞ்சம் அல்லது மாமூல் வாங்கிக் கொண்டோ, அரசியல்வாதிகளின் 'அன்பு'க் கட்டளைக்கு அடிபணிந்தோ, போலீசார் இவர்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர்.சென்ற ஆண்டு, கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த பிறகு பொங்கி எழுந்த காவல் துறையினர், அதிரடி சோதனை நடத்தி, இரண்டே நாட்களில், கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக, 1,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகளை பதிந்ததுடன், பலரை கைதும் செய்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், 2017ல் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து, அதில் மூவர் இறந்தனர். அதைத் தொடர்ந்து, கந்துவட்டி, மீட்டர்வட்டி, ஜெட் வட்டி என்றெல்லாம், அதிக வட்டி வாங்குபவர்களுக்கு எதிராக, சில வாரங்கள்நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு நடவடிக்கை இல்லை; அதனால், இப்போது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.குற்றங்களை தடுத்து, மக்களை காக்க வேண்டிய காவல் துறை, இப்படி,உயிரிழப்பு நடந்தால் மட்டும் சில நாட்களுக்கு கண்துடைப்பு நடவடிக்கை எடுப்பது சரியா? நியாயமா? தர்மமா? மாமனார், மாமியார் சுமையா?
பி.ஜோசப்,
திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருவன் தன் தாய் -
-தந்தை இருவரையும், இரக்கமின்றி கொலை செய்து விட்டான். காவல்துறை அவனை கைது
செய்து, கோர்ட்டில் வழக்கு தொடுத்து, தண்டனை வழங்கும் நிலையில், நீதி
வழங்க இருக்கும் நீதிபதி, அந்த கொலைகாரனைப் பார்த்து, 'உன் கடைசி ஆசை என்ன?
ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' என்று யதார்த்தமாக கேட்டார்.உடனே
அந்த கொலைகாரன், கண்களை கசக்கி அழுதபடி, 'எசமான்... எனக்கு ஒறவுன்னு
சொல்லிக்க இப்போ அம்மாவும் இல்லை; அப்பாவும் இல்லை. நான் ஒரு அனாதை. இந்த
அனாதைக்கு கருணை காட்டி, மன்னித்து விடுதலை செய்தால், மகிழ்ச்சி அடைவேன்
எசமான்' என்றானாம்.பிறந்த தாய் நாட்டுக்கு துரோகம் செய்தது
மட்டுமின்றி, வெளிநாடுகளிடமிருந்து கையூட்டு வாங்கி, காலிஸ்தான்
தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு திட்டமிட்ட தேசத்துரோகி, கெஜ்ரிவால்,
'நான் சிறைக்கு சென்றால்,மக்களின் நிலையை எண்ணி வருந்துகிறேன். 'நான்
சிறைக்கு சென்றால், என் வயதான பெற்றோரை பார்த்து கொள்ளவும், அவர்கள் நல்ல
உடல்நலனுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள்
விரும்பினால், விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவேன்' என்று பிலாக்கணம்
பாடி இருக்கிறார்.நாம் துவக்கத்தில் சுட்டிக் காட்டிய பெற்றோரை
கொன்ற கொலைகாரன், நீதிபதியிடம் கோரிய கடைசி ஆசைக்கும், கெஜ்ரிவால் தன்
பெற்றோர் குறித்து, நொந்த பாசம் காட்டுவதற்கும் ஏதாவது வித்தியாசம்
தெரிகிறதா?கெஜ்ரிவாலின் கோரிக்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா?தற்கால
மருமகள்கள், மாமியார் மற்றும் மாமனாரை சுமையாகத்தான் கருதுகின்றனர்.
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மட்டும் விதிவிலக்கா என்ன! 'அவள் அப்படித்தான்'
என்பதை, கெஜ்ரிவாலின் புலம்பல் புரிய வைக்கிறது. விமர்சிப்பவர்கள் கவனத்திற்கு இது!
எஸ்.சுந்தரம்,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் நரேந்திர மோடி,
கன்னியாகுமரியில் தியானம் செய்தது பற்றி, பல்வேறு விமரிசனங்கள் எழுந்தன.
அவர் ஏன் தன் வீட்டிலேயே தியானம் செய்திருக்கக் கூடாது என்றெல்லாம்
கூறினர்.நம் பூமி, எவ்வளவோ வளங்கள் கொண்டது. ஆனால், ஒவ்வொரு கனிம
வளமும், எல்லா இடத்திலும் இருக்காது. தங்கம் வேண்டுமென்றால் குறிப்பிட்ட
இடத்திலும், இரும்புத்தாதுவோ, வேறு கனிமங்களோ வேண்டுமென்றால், அந்தந்த
இடங்களிலும் தோண்டினால் தான் கிடைக்கும். வீடுகளிலோ, வயல்களிலோ கிணறு
தோண்டக் கூட, தண்ணீர் கிடைக்கும் இடத்தை ஆராய்ந்து தேர்ந்ெதடுத்து
தோண்டுவது வழக்கம்.நம் கோவில்களும், வழிபாட்டுத் தலங்களும் அப்படியே!அதாவது
ரிஷிகளும், சித்தர்களும் சரியான இடங்களைப் பற்றிக் கூறி, அந்தந்த
இடங்களில் அரசர்கள் கோவில்கள் எழுப்பியுள்ளனர். சில இடங்களில் அரசர்களின்
கனவில் தோன்றியும், அசரீரிகள் மூலமாகவும் இடம் தேர்வு செய்யப்பட்டு,
ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எனவே, அந்த இடங்களின் சக்தி பற்றி
நாம் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான் கோவிலுக்குச் சென்று வலம் வருகையில்,
நாம் புத்துணர்ச்சியை உணர்கிறோம்.அப்படிப்பட்ட ஒரு இடம் தான்,
பிரதமர் தேர்ந்தெடுத்த கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடம். அங்கு சென்று
தியானம் செய்வதால், சிறந்த புத்துணர்ச்சியும், நாட்டிற்குகந்த நல்ல
பலன்களும் கிடைக்கும் என்று தான், அரசியல் ஆரவாரங்கள் இல்லாத, அமைதியான
இடத்தை தியானம் செய்யதேர்ந்தெடுத்துள்ளார்.பகவத்கீதையில்,
தியானத்திற்கு உகந்ததாக கூறியுள்ளபடி, அதிக உயரமும் இல்லாமல், மிகவும்
குறைவான உயரமும் இல்லாமல், சரியான ஆசனத்தில் அமர்ந்து தியானம்
செய்துள்ளார்.விமர்சிப்பவர்கள் கவனத்திற்கு இது!