வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மின்சார கட்டணம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 4.83 சதவீதம், ஜூலை 1ல் இருந்து அனைத்து பயனாளர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இது, அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர வழிவகை செய்துள்ளது. ஏற்கனவே பால், பால் பொருட்கள், வீட்டு வரி, பத்திரப்பதிவு கட்டணங்கள், காய்கறிகள், அரிசி, பருப்புகள், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை, இந்த மின் கட்டண உயர்வு மேலும் துயரத்தில் மூழ்கடித்து விடும். ஒரு வீட்டில், 1 - 2 'ஏசி'க்கள், சில மின் விசிறிகள், 4 - 5 பல்புகள் இருந்தால் கூட, இரண்டு மாத பில் சுலபமாக 10,000 ரூபாயை தாண்டிவிடுகிறது; இது, எளிய, நடுத்தர மக்களுக்கு ஒரு பெரிய தொகையே.வழக்கம்போல, 'இந்த கட்டண உயர்வு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே பின்பற்றப்படுகிறது' என்று கூறி, பழியை மத்திய அரசின் மேல் போட முயற்சிக்கின்றனர். 'அடித்தட்டு மக்களை பாதிக்காது' என கூறி, மக்களின் கோபத்தை சற்றே தணிக்கப் பார்க்கின்றனர். ஆனாலும், ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தியும், மின் வாரியம் லாபத்தில் இயங்கவில்லை. அனைத்து உபயோகிப்பாளர்களுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்படவில்லை; மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டண வசூல் செய்யப்படவில்லை. நிர்வாக கொள்முதலில், உதாரணத்திற்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குதல், நிலக்கரி இறக்குமதி, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் போன்றவற்றில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம், ஏன் சில பிரிவினருக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்? மின் கசிவு, மின் திருட்டு, மின் விரயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றை எல்லாம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, மின்வாரியத்தை லாபகரமாக இயங்கும் ஒரு நிறுவனமாக மாற்றிவிட்டால், அடிக்கடி மின்கட்டணத்தை அரசு உயர்த்த வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க முடியுமே! புரிந்து கொள்வோம் இதை!
கு.அருண்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இடைத் தேர்தல்கள்,
எப்போது ஆளுங்கட்சிக்கு எடைத் தேர்தலாக அமைகின்றனவோ, அப்போது தான் அவர்கள்
தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்வர்.ஆனால், நம்
தமிழகத்தில் இடைத் தேர்தல்கள், 99 சதவீதம், ஆளுங்கட்சிக்கே சாதகமாக
அமைகின்றன; பணபலமும், அதிகாரபலமும் அங்கே முழுவீச்சில் வேலை செய்து,
ஆளுங்கட்சியை வெற்றி பெறச் செய்கின்றன.சமீபத்திய விக்கிரவாண்டி
தேர்தலில், 250 கோடி ரூபாய் செலவு செய்து, ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக,
பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார். மேலும், 30,000 ஓட்டுகளுக்கு ஒரு
அமைச்சர் என வேலை செய்து, 'மாபெரும்' வெற்றியைக் கொடுத்துள்ளனர்.விஷயம்
என்னவெனில், கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வெறும் 7,000
ஓட்டுகளில் தான் தோல்வி கண்டது. இந்த முறை பயந்து, தேர்தலில் போட்டியிடாமல்
பின்வாங்கி விட்டது. அக்கட்சியின் ஓட்டுகள், நாலாபக்கமும் சிதறிவிட்டன.பா.ம.க.,
கடந்த லோக்சபா தேர்தலை விட, 24,098 ஓட்டுகள் அதிகம் பெற்றுள்ளது; நாம்
தமிழர் கட்சியும் 10,000 ஓட்டுகள் பெற்றுள்ளது. இரண்டு கட்சிகளுமே, இங்கு
பணம் ஏதும் கொடுக்காமல், வளர்ச்சியைக் காட்டியுள்ளன.எனவே, இந்த
தேர்தல் காசு கொடுத்து பெற்ற ஓட்டு பெரிதா, காசு கொடுக்காமல் பெற்ற ஓட்டு
பெரிதா என்ற ஆராய்ச்சியையும், தேர்தலில் போட்டியிடாமல், சிதறிய ஓட்டுகள்
எத்தனை என்ற ஆராய்ச்சியையும் செய்ய வைத்துள்ளது.பணம் ஏதும்
கொடுக்காமல், தைரியமாய் தேர்தலைச் சந்திக்க முற்படும் கட்சிகளுக்கே மவுசு
என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களாகிய நமக்கு பாடம். புரிந்து
கொள்வோம் அதை! எது வந்தாலும் நிலை மாறாது!
சுப்ர.அனந்தராமன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசால்
உதாசீனம் செய்யப்பட்ட மூன்று சேவைத்துறைகளில், 'இந்தியா போஸ்ட்ஸ்' என்ற,
அகில இந்திய அஞ்சல் துறை, பி.எஸ்.என்.எல்., எனப்படும் தொலைபேசி - அலைபேசி
வசதிகள் தரும் தொலை தொடர்புத் துறை மற்றும் அரசு வங்கிகளில் ஒன்றான,
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் ஆகியவை மிக முக்கியமானவை.தமிழக அரசின்
அமுதம் சிறப்பங்காடிக்கும் இதே நிலைமை. அமுதம் சிறப்பங்காடி கடைகள்,
தமிழகம் முழுவதிலும் சாதாரண மக்களுக்கு அரிசி, பருப்பு வகைகள், மளிகை
சாமான்கள், பல வித வீட்டு உபயோகப் பொருட்கள் என்று, பல பொருட்களை, சந்தை
விலையை விட 10 முதல் 30 சதவீதம் வரை குறைத்து விற்பனை செய்து வந்தன. ஆனால்,
இத்தகைய அங்காடிகள் குறித்து எந்த விளம்பரத்தையும் அரசு வெளியிடுவதில்லை.
சென்னையில் இந்த அங்காடிகளுக்கு, விஷயம் தெரிந்த பணக்கார சிந்தி, மார்வாரி
இனத்து மக்களே கார்களில் வந்து, பொருட்களை அள்ளிக் கொண்டு செல்கின்றனர்;
மற்றவர்கள் வருவதே இல்லை. காரணம், இத்தகைய கடைகள் இருக்கும் இடம்
தெரிவதில்லை.அமுதம் சிறப்பங்காடி கடைகள் இருக்கும் இடங்கள், மிக
மோசமான குப்பைக் கழிவுகள், வாரக்கணக்கில் அகற்றப்படாத இடங்களில்,
துர்நாற்றமடிக்கும் மீன்கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் பல அசுத்தமான
இடங்களில் தான் அமைந்துள்ளன. அடுத்து, தேசிய அஞ்சல் துறை.
முன்பெல்லாம் தபால் ஆபீஸ்களில், பதிவுத் தபால், மணி ஆர்டர், போஸ்டல் ஆர்டர்
ஆகிய சேவைகளை, சாமானிய மக்களுக்கு அளிக்கும் கவுன்டர்களை, பிற்பகல் 3:00
மணிக்கு மூடி விடுவர். மாலை 5:00 மணி வரை, தபால் கார்டுகள்,
இன்லாண்ட் கடிதங்கள், அஞ்சல் உறைகள், ஸ்டாம்புகள் விற்பனை செய்யப்படும்;
ஆனாலும் தபால் சேவை அற்புதமாகவே இருந்தது. இப்போது இந்தியா
முழுவதிலும் அஞ்சல் அலுவலகங்கள், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
இயங்குமாறு செய்துள்ளனர். ஆனாலும் ஒரு கல்யாண அழைப்பிதழைக் கூட
இப்போதெல்லாம், 'ஸ்பீடு போஸ்ட்' அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப, காலை 8:00
மணிக்கே, நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. முக்கியமான
ஆவணங்களை பதிவுத் தபால்/ ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்புவது கொள்ளை மலிவு
என்பதால், தனியார் பெருமுதலாளிகள் தங்கள் ஊழியர்கள் மூலம், தபாலாபீஸ்
கவுன்டர்களை, காலை 8:00 மணிக்கே ஆக்கிரமித்து விடுகின்றனர்.அஞ்சல் துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்றால் அது, மக்களுக்குத் தான் நஷ்டம் என்ற சிந்தனை, யாருக்குமே வருவதில்லை.அடுத்தது இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்.இந்தியன்
ஓவர்சீஸ் பாங்கை நிறுவியவர் சர் எம்.சி.டி.எம்.சிதம்பரம் செட்டியார். அந்த
வங்கியின் சிறந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெறத் தடையாக இருப்பவர்கள்,
மேல் மட்டத்து நிர்வாகிகளும், அவர்களை ஆட்டிப் படைக்கும் அரசியல் கட்சித்
தலைமையுமே என்பது தெளிவாகும். மத்தியில் எந்த அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், நிலைமை மாறப் போவதில்லை என்பது தான் சோகம்.