உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இல்லையேல்... சிரமம் தான்!

இல்லையேல்... சிரமம் தான்!

என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் 2026ல் அமையப் போகும் தமிழக அமைச்சரவையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற வேண்டும் என்று என் விருப்பத்தை மட்டுமே சொன்னேன். என் விருப்பத்தைக் கண்டித்து, இளங்கோவன் எதற்காக மீடியாக்காரர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும்?' என, அப்பாவித்தனமாக ஆதங்கப்பட்டிருக்கிறார் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்.இதற்கிடையில், 'காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் நிச்சயம் வெற்றி பெறும்' என, தன் பங்குக்குசீண்டிப் பார்த்தார், அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை.இந்த இருவரின் பேச்சுக்கு தான், இளங்கோவன் பதில் சொன்னார்.காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால், டிபாசிட் கூட வாங்க முடியாது என்ற யதார்த்தம் இளங்கோவனுக்குபுரிகிறது. ஆனால், கார்த்தி சிதம்பரத்துக்கும், செல்வப்பெருந்தகைக்கும் அதுபுரியவில்லை.தி.மு.க., அமைப்பு செயலர் ஆர். எஸ்.பாரதியின் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது தி.மு.க., போட்ட பிச்சை தானே! இளங்கோவன் பிழைக்கத் தெரிந்த மனிதர் என்பதால் தான், திராவிட மாடல் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான் என்று புகழ்ந்து தள்ளினார்.காமராஜரையே தேர்தலில் அவரது சொந்த ஊரான விருதுநகரில் ஒரு சாதாரண மாணவன் மூலம் தோற்கடித்த அசகாய சூரர்கள் அல்லவா தி.மு.க.,வினர்!காமராஜருக்கே அந்த கதி என்றால், கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை போன்றோர், தி.மு.க., ஆதரவு இல்லாமல் எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியும்? இருவரும் சுதாரித்தால், கட்சியில் நீடிக்க முடியும். இல்லையேல், சிரமம் தான்!

தண் டனை , அபராதம் வி தியுங் க ள்!

ஆர்.கிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுநலம் என்ற, 'லேபிள்' ஒட்டி, கோர்ட்டுகளின் நேரத்தை கெடுக்கும் வகையில் வழக்கு தொடுக்கும் பேர்வழிகளுக்கு, உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் அவ்வப்போது அபராதம் விதிக்கின்றன; அதனுடன் சிறை தண்டனையும் வழங்குகிறதா என தெரியவில்லை.பொருளாதாரத்தில்பின் தங்கியுள்ள, சாமானிய கிராமப்புற மாணவர்களும் மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து குறைந்த செலவில் மருத்துவம் பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 'நீட்' என்ற தேர்வு முறை கொண்டு வரப்பட்டது.அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு கல்லா கட்ட முடியாமல், 'அம்பேல்' ஆகிறதென்பதால், சில மாநில அரசுகள்,இந்தத் தேர்வை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.இந்த வழக்குக்கு அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர், முன்னாள் காங்கிரஸ் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, நளினி சிதம்பரம்.மனைவி 'நீட்' தேர்வை ஆதரித்து நீதிமன்றத்தில் வாதாட, கணவர் ப.சிதம்பரம், பொது மேடைகளில் அந்த 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என முழங்குகிறார்.உச்ச நீதிமன்றமும், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து விட்டது.தற்போது தமிழகத்தை தொடர்ந்து, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகியவையும், 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.அடுத்து இனி அந்த 'இண்டியா' கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றும், வரிசையாக தீர்மானம் நிறைவேற்றும்.அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், 'நீட்' தேர்வு ரத்தாகி விடுமா என்ன?உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணாக்கும் வீணர்களுக்கு அபராதம் விதிப்பது மாதிரி, இந்த மாநில அரசுகள், கிராமப்புற ஏழை மாணவ- - மாணவியரின் வாழ்க்கையோடு விளையாடுகின்றன என, அவை ஒவ்வொன்றுக்கும் தலா 1,000 கோடி ரூபாய் அபராதமும், அமைச்சரவையில் உள்ளவர்கள் அனைவருக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்க முடியாதா?அப்படி அபராதமும், சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தால், இந்த 'நீட்' தேர்வை வைத்து இந்த அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நடத்திக் கொண்டி ருக்கும் அக்கப்போருக்கு ஒரு முடிவு வரும் அல்லவா!

ஈ.வெ. ரா., வழி நடப்பரா?

அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சியில்கள்ளச்சாராயத்திற்கு அதிகபட்ச உயிர்களை பலி கொடுத்ததால், நாடே பதறியதற்கு பரிகாரமாக, 'கள்ளுக்கடைகளை ஏன் மீண்டும் திறக்கக் கூடாது!' என்று, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சிபாரிசு செய்திருக்கிறது. அதிக விலைக்கு கலப்பட மதுவை விற்பதற்கு பதிலாக ஆர்கானிக் பானமான கள் விற்பனையை அனுமதிக்கலாமென்று பலரும் தொடர்ந்து அரசை வலியுறுத்துகின்றனர்; போராட்டங்களும் நடக்கின்றன. ஒரு மரத்து கள்ளை ஒரு மண்டலம் பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக உறுதிப்படும் என்ற நம்பிக்கை, இன்றும் கிராமங்களில் நிலவுகிறது. இதையே வலியுறுத்தி, 1963, ஜன., 22ல், கும்பகோணம் மூர்த்தி கலையரங்கில் மது ஆதரவாளர்களின் மாநாடு நடந்தது. அதில் தலைமையேற்று பேசிய ஈ.வெ.ரா., 'தொழிலாளி வேலையெல்லாம் முடித்து, கொஞ்சம் கள் பருகிய பிறகு துாங்கினால், மறுநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வான்' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஈ.வெ.ராமசாமியின் தங்கை கண்ணம்மாவின் கணவரான மாப்பிள்ளை நாயக்கர், 'மாப்பிள்ளைக்கு அதிசார வயிற்றுப்போக்கு என்ற வியாதி இருந்தது. இதற்கு மருந்தாக கள் பருகி, குணமானார். திடீரென மதுவிலக்கு அமலானதால், கள் கிடைக்காமல் வியாதி முற்றி இறந்து போனார்' என்றும், அவர் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி கள்ளை, ஒரு மருத்துவ பொருளாக நாட்டு வைத்தியம் நிரூபித்திருக்கிறது. அந்நாளில் யாருக்காவது கள் தேவைப்பட்டால் தான், மரமேறி, கள் இறக்கி விற்பனை செய்வர். அதுவே, கள்ளுக்கடை என்றுதொழிலாக மாறிய போது, போட்டியை சமாளிக்க, போதையை அதிகரிக்க துவங்கினர். 'கள்ளில் ஊமத்தை விதை, கஞ்சா இலை போன்றவற்றை கலந்ததால், கள் குடிப்பது கெடுதல் என்ற நிலை உருவானது' என்றும் ஈ.வெ.ராமசாமி குறிப்பிடுகிறார். கள்ளில் போதைக்காக சில கெடுதலான பொருட்களை கலந்து, அதன் மருத்துவத் தன்மையை விஷமாக்கியதால் தான், கள்ளுக்கடையை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக, எம்.ஜி.ஆரும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, தென்னை, பனை, ஈச்ச மரங்களிலிருந்து கள் இறக்கி, பதநீர், இளநீர், நுங்கு போல விற்க அனுமதிக்கலாம். இதனால், பல்லாயிரம் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் கிடைக்கும். அரசு பரிசீலித்து உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஆக 01, 2024 23:55

சிறு குழந்தைகள் குடிக்கும் பாலிலேயே கலப்படம் செய்பவர்கள் கள்ளை மட்டும் விட்டு வைப்பார்களா?


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 14:00

அதிமுகவுடன் கைகோர்க்க ராகுல் நினைத்து செல்வத்தையும், கார்த்தியையும் பேசவைத்திருக்கலாம்... காங்கிரசை வரவேற்க எடப்பாடியும் திறந்து வைத்து காத்தாட அமர்ந்திருக்கிறார் ....


Anantharaman Srinivasan
ஆக 01, 2024 11:12

கள் விற்க அனுமதி கிடைத்தவுடன் கள்ளையும் போதை ஏற விஷ சாராயம் போல் கலப்படம் செய்து விற்பனை செய்ய ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவிலில்லை.


VENKATASUBRAMANIAN
ஆக 01, 2024 09:29

காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டில் கலைத்து விட்டு திமுகவுடன் இணைந்து விடலாம். இதைத்தான் இளங்கோவன் கூறியுள்ளார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை