உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அரசியல் மாற்றம் வேண்டும்!

அரசியல் மாற்றம் வேண்டும்!

காசி குமரன், கே.புதுர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள் வரிப்பணத்தை, மக்களுக்கே, பிச்சையாகவும், இலவசமாகவும், மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் செய்வது நாட்டிலோ, மாநிலத்திலோ சிறந்த பொருளாதார மாற்றத்தை உருவாக்கி விடாது.கல்விக்கடன் ரத்து ஒரு கேலிக்கூத்து. அது, கல்வி நிறுவனங்களை கொள்ளைக்காரர்கள் நடத்த அனுமதி கொடுக்கும் மாபெரும் குற்றச் செயல். மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, வாக்குகளை அறுவடை செய்து, பிறகு ஆட்சிக்கட்டில் வந்த பின் தன் கட்சிக்காரர்களுக்கு மட்டும் சலுகை காட்டி, கீழ்த்தரமான நிர்வாகத்தை செயல்படுத்தும் எந்த அரசும், மக்கள் விரோத அரசே.கடந்த 70 ஆண்டுகளாக, தமிழகத்தில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. பணப்புழக்கம் உள்ளது; கடனும் உள்ளது; கவலையும் உள்ளது. வீட்டுக்கடன், கல்விக்கடன், பர்சனல் கடன், கிரெடிட் பொருள் கடன், சீர்பொருள் கடன், வங்கி நகை அடமானக்கடன், தனியார் சீட்டுக்கடன், ரவுடிகளிடம் வாங்கிய கைமாத்துக்கடன், ரன் வட்டி, மருத்துவக் கடன் போன்றவற்றில் சிக்கி, மக்கள் தவிக்கின்றனர்.சீரான முன்னேற்றம் இல்லாமல், நடுத்தர மக்களும், ஏழைகளும், கடனிலும் கவலையிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். கட்சிக்காரர்களும், கட்சித் தலைவர்களும், மன்னர்கள் போல் உலா வருகின்றனர். மக்கள் செலுத்தும் சிறிய வரிப்பணம், கோடியாகக் குவிந்தாலும், அந்தப் பணத்தை ஆக்கபூர்வமாக செலவழிக்காமல், தன் கட்சிக்காரர்கள் கொள்ளையடிக்க வசதியாக பட்ஜெட் போடுகின்றனர்.சினிமா, சாராயம், 'டிவி' சீரியல் போன்றவற்றில், மக்களை மூழ்க வைத்து, அனைவரையும் பிச்சைக்காரர்களாக மாற்றி, அரசு கஜானாவைக் காலி செய்வதோடு நில்லாமல், 8 லட்சம் கோடிக்கு கடனாளி மாநிலமாக்கி, நடுத்தெருவில் நம்மை நிற்க வைத்து விட்டனர்.தேசியத்தை இகழ்வதும், தெய்வத்தை இகழ்வதும், பாரம்பரிய தர்மத்தை ஒழிப்போம் என்று கூறுவதும், பாரதப் பண்பாட்டை குலைக்கும் எண்ணமாகும். மக்கள் வெள்ளைக்காரர்களை விரட்ட வெகுண்டெழுந்தது போல், தமிழகத்தில் கொள்ளைக்காரர்களை விரட்ட, அரசியல் மாற்றம் வேண்டும்.

பீமனும், ஸ்டாலினும்!

ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலமாக, முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரை நிகழ்த்தும் இடங்களிலாகட்டும், வேறு அரசு விழாக்கள் எதுவாகட்டும்... மைக் முன் நின்றால், 'மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதியுதவி செய்வதில்லை' என்று திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.மத்திய அரசு தரப்பிலிருந்து அவரது குற்றச்சாட்டுக்கு, புள்ளி விபரத்தோடு பதில் அளித்தாலும், அந்த புள்ளி விபரத்தை இடது 'கை'யால் புறந்தள்ளி விட்டு, தான் சொல்லும் உண்மைக்கு மாறான தகவலையே, மேடைதோறும் மீண்டும் மீண்டும் புளுகிக் கொண்டிருக்கிறார்.மத்திய அரசிடம் இருந்து, அவர் எதை எப்படி எதிர்பார்க்கிறார் என்று ஒரே குழப்பமாக இருப்பதோடு, தமிழ்நாட்டு அரசு மூலமாக வசூல் செய்யும் தொகைகளும் என்ன ஆகின்றன, எப்படி போகின்றன என ஒரே மர்மமாக உள்ளது. மஹாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு.குந்தி மற்றும் பாண்டவர்கள் ஐவரும், ஏகசக்ராபுரம் என்ற கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். தினந்தோறும் உஞ்சவிருத்தி - கழக மொழியில் சொல்வதானால் பிச்சை - எடுத்துத் தான், உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர்.ஐந்து பிள்ளைகளில், பீமனுக்கு வயிறு மெகா பெரிசு.அதனால் குந்தி, பிள்ளைகளின் குணமறிந்து, ஐவரும் எடுத்து வரும் பிச்சையில் சரிபாதியை, பீமனின் பங்காக பகிர்ந்தளித்து விட்டு, மீதி பாதியை மற்றவர்கள் உண்டு வந்தனர். அதுபோல, முதல்வர் ஸ்டாலின் ஆசைப்படுவதுபோல, ஒருவேளை மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்து விட்டால், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் சரிபாதியை, தமிழ் நாட்டுக்கே தாரை வார்த்துவிட்டு, மீதி பாதியை கொண்டு, மத்திய அரசு, அதன் நிர்வாக செலவையும், மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கும் உதவிகளையும் பார்த்து கொள்ள வேண்டும் என விழைகிறாரோ?

தேர்தலுக்காக கும்மியடிக்கும் கொள்கையில்லா கூட்டணி!

த.யாபேத் தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த, 2014 மற்றும் 2019ல், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது ஆனால், கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்து செல்கிறது. கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் மத்திய அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். கடந்த, 2004 - 2014 வரையிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தான் பதவியிலிருந்தது. ஆனால், காங்கிரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடையாது. தி.மு.க.,விலிருந்தும் பலர் மந்திரிகளாய் இருந்தனர் என்பதை மறுக்க முடியாது.இப்போது, 'மாநிலங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதனால் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்' என்று, தி.மு.க., வினரால் பிரசாரம் செய்யப்படுகிறது.வாஜ்பாய் அரசில் இவர்கள் மந்திரிகளாய் கோலோச்சினரே... அப்போதெல்லாம், மாநில உரிமை பறிக்கப்பட்டதாக எதுவுமே நடக்கவில்லையா?மத்தியில் மன்மோகன் சிங் அரசில் அங்கம் வகித்தபோது, பெரும்பாலான ஊழல் குற்றச்சாட்டுகள்,தி.மு.க., அமைச்சர்கள் மீது தான் இருந்தன. இது தான் நாடறிந்த உண்மை. காங்கிரஸ் வீழ்ந்து, இப்போது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக கூட ஆக முடியாததற்கு, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தான் மிகப்பெரிய காரணம். இந்த உண்மையை காங்., இன்னும் உணரவில்லை என்பது வேதனை தான்.இப்போது இவர்களுக்கெல்லாம் மத்திய அதிகாரப் பசி. அதனால் கலர் கலராக, 'ரீல்' விடுவர். 'இண்டியா' கூட்டணியில் இந்த நொடிவரை ஒரு ஒருங்கிணைப்போ, ஒற்றுமையோ இல்லை.மாறாக, கட்சி துவங்கியநாளிலிருந்து பா.ஜ., சொல்லிக் கொண்டிருந்த அனைத்தையும் சட்டபூர்வமாகவும், அமைதியாகவும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. கொள்கை ரீதியிலான தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு தான், மக்கள் பிரச்னையை தீர்க்க முடியுமே அல்லாமல், தேர்தலுக்காகவே கூடி கும்மியடிக்கும் கொள்கையற்ற கூட்டணிகளால் அல்ல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

pushpa
மார் 30, 2024 12:34

மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, வாக்குகளை அறுவடை செய்து, பிறகு ஆட்சிக்கட்டில் வந்த பின் தன் கட்சிக்காரர்களுக்கு மட்டும் சலுகை காட்டி, கீழ்த்தரமான நிர்வாகத்தை செயல்படுத்தும் எந்த அரசும், மக்கள் விரோத அரசே


புதிய வீடியோ