ஆர்.ராகவன், சென்னையில் இருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு முதல்வராக தகுதி இல்லையா?' என்று கேட்டு உள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன். தலைமை செயலகத்தில் பியூனாக பணியாற்றும் ஒருவர், தான் 35 ஆண்டுகள் பணி செய்துள்ளதாக கூறி, தனக்கு இலாகா செகரெட்டரி பதவி கொடுங்கள் என்று கேட்க முடியுமா? எதை, எதனோடு ஒப்பிடுவது என்று விவஸ்தை இல்லையா? முதல்வர் பதவி என்பது, 'நியமன' பதவி அல்ல; மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அ.தி.மு.க., முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வமும் , பழனிசாமியும் வேண்டுமானால், புறவாசல் வழியாக வந்து முதல்வர் ஆசனத்தில் அமர்ந்து இருக்கலாம். ஆனால், தாங்கள் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து விட்டு போட்டியிட்டால் தெரியும்... எத்தனை ஓட்டுகள் வாங்குகின்றனர் என்பது! இந்தியாவில் ஜனாதிபதி மற்றும் கவர்னர் பதவிகளுக்கு மட்டுமே, 35 வயது நிரம்பிய, இந்திய குடிமகனாக இருந்தால் போதுமானது. அதிலும், ஜனாதிபதி பதவியில் அமர, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். கவர்னர் பதவி ஒன்று மட்டும் தான், மத்திய அரசால் நேரடியாக நியமனம் செய்யப்படுவது. அப்படி பார்த்தால், நானும் ஓர் இந்திய குடிமகன், 70 வயதானவன். இந்த இரண்டு தகுதிகளும் இருக்கிறதென்று, நான் கவர்னர் பதவிக்கு ஆசைப்பட முடியுமா? முதல்வர் ஆக வேண்டும் என்றால், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்துங்கள்... உங்கள் கட்சியை எத்தனை சதவீத மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொண்ட பின், முதல்வர் பதவிக்கு நீங்கள் தகுதி ஆனவரா, இல்லையா என்று உங்களுக்கே தெரிந்து விடும். அதை விடுத்து, ஒரு பெரிய கட்சியில் நாலு எம்.எல்.ஏ., இரண்டு எம்.பி., சீட்டு களை வாங்கி, அக்கட்சியுடன், 'ஒட்டி' கொண்டிருந்தால் மட்டும், முதல்வர் பதவிக்கு தகுதியான ஆளாகி விட முடியுமா? ஓட்டை பாத்திரமான போக்குவரத்து துறை! பி.சுப்பிரமணி, சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பஸ் கட்டண உயர்வு குறித்து மக்களிடம்
கருத்து கேட்பு நிறைவு; எந்த நேரத்திலும் கட்டண உயர்வு அறிவிப்பு வரலாம்'
என்ற செய்தி படித்தேன். ஆனால், கடந்த மாதம் பஸ் கட்டணம் உயராது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தாரே... எதை நம்புவது? அமைச்சர் கூறியுள்ளபடி கட்டணம் உயராது எனில், மக்களிடம் கருத்து
கேட்டிருக்க வேண்டாமே... மாதந்தோறும், அரசு போக்குவரத்து கழகங்களில், 600
கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர், அதிகாரிகள். டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணங்களாக கூறப்படுகின்றன. திறமை
இல்லாதவர் வாகனம் ஓட்டினால், வண்டி தடுமாற மட்டும் செய்யாது; தடம் புரளவும்
செய்யும்! அதேபோன்று தான் திறமை இல்லாதவர்களின் நிர்வாகமும்! அரசு அதிகாரிகளின் வீண் செலவு, திட்டமிடாமை, தொலைநோக்கு பார்வையின்மை போன்றவையே போக்கு வரத்து துறையின் நஷ்டத்திற்கு காரணம்! அக்காலத்தில், டி.வி.எஸ்., கம்பெனி, ராமன் அண்டு ராமன் கம்பெனி, பாரதி
டிரான்ஸ்போர்ட் போன்ற பஸ் நிறுவனங்களில், பி.இ., - எம்.பி.ஏ., படித்தவர்கள்
எவரும் இருந்ததில்லை. ஆனாலும் , அக்கம்பெனிகள் நஷ்டத்தில் ஓடவில்லை. உபரி
லாபமே கண்டன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த
அதிகாரிகள் அதிகமாக இருந்தும், திறமையின்மை காரணமாக, மெல்ல தேய்ந்த
போக்குவரத்து துறை, அலை கடலில் சிக்கிய துரும்பு போல், இன்று நஷ்டத்தில்
திண்டாடுகிறது. போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர்களாக
கோட்டீஸ்வரன் சிங் ஐ.ஏ.எஸ்., ராமசுப்ரமணியன் போன்றோரின் நிர்வாகத்தில் மிக
குறைந்த அளவில் நஷ்டம் இருந்தது. ஆனால், சமீபத்தில் நாளுக்கு நாள்
நஷ்டம் அதிகரித்தபடியே இருக்கிறது . ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்
கொண்டிருந்தால், நீர் ஒழுகிக் கொண்டே தான் இருக்கும். ஒன்று, ஓட்டையை
அடைக்க வேண்டும் அல்லது பாத்திரத்தை மாற்ற வேண்டும். இங்கு இரண்டும் இல்லை.
'ஒவ்வொருவரின் பொறுப்பும் எவருடைய பொறுப்பும் இல்லை என்றாகி விட்டது' என்பது தான் இன்றைய போக்குவரத்து துறையின் நிலை. என்ன தான், 'தினமலர்' நாளிதழ்கள் போன்ற பத்திரிகைகள் பிரச்னைகளை இடித்துரைத்தாலும், பலன் பூஜ்ஜியம் தான்! எதிர்ப்பு அரசியலில் குளிர் காயும் விஜய்! ஆர்.அனன்யா, பொள்ளாச்சி யில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சோழர்களின் பெருமையை பா.ஜ.,விடம்
தி.மு.க., அடகு வைத்து விட்டதாக , த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் அறிக்கை
வெளியிட்டுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் சிறப்பு.
பிரதமர் மோடி ஒரு மாநிலத்துக்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை; ஒட்டுமொத்த
இந்தியாவிற்கும் அவர் தான் தலைவர். ஒவ்வொரு மாநிலத்திற்கு மான
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல; அம்மாநிலத்தின்
பெருமைக்குரியவர்களை சிறப்பு செய்வதும் அவரது அரசியல் கடமை களில் ஒன்று;
அப்படித்தான் சோழ பேரரசின் பெருமையை கொண்டாடு கிறார் பிரதமர். இதில் என்ன
தவறு? சினிமா நடிகரான விஜய், தன் மாநிலத்தின் மீதான பற்றை,
கொள்கையை தன் பட வினியோகத்தில், தான் ஆரம்பித்துள்ள பள்ளியில்
காட்டியிருந்து இக்கேள்வியை கேட்டிருந்தால், அதில் ஓர் அர்த்தம் உண்டு. ஆனால், பணம் சம்பாதிக்க, தான் நடித்த படங்களை பல மொழிகளில் வெளியிடுவார்.
அதுவும் போதவில்லை என, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆரம்பித்து கல்லா கட்டுவார்.
ஆனால், பேசுவது தமிழ், தமிழர் நலனாம்... முதல் தேர்தலையே
சந்திக்காத விஜய், நடிகர் என்ற அரிதார வசீகரத்துக்காக கூடும் கூட்டத்தைப்
பார்த்து, தமிழகத்தையே தனக்கு தாரை வார்த்துக் கொடுத்து விடுவர் என்று
தப்புக் கணக்குப் போட்டு, 'நானும் ரவுடி தான்' என்பது போல், 'நானும்
அரசியல்வாதி தான்' எனக் காட்ட, இதுபோன்று அவ்வப் போது அறிக்கை வெ
ளியிடுகிறார். கண்மூடித்தனமாக மத்திய அரசை எதிர்த்து, அதன் வாயிலாக சிறுபான்மை ஓட்டுகளை பெற்று, அதில் குளிர் காய நினைக்கிறார். பார்ப்போம்... 2026 தேர்தல் குளிரை போக்கு கிறதா, ஜன்னி காண வைக்கிறதா என்று!