உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதா?

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதா?

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரமணா படத்தில், பிணத்தை வைத்து காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவமனை போல, 50 ஆண்டுகளுக்கு முன்பே மரணித்த ஜனநாயகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர், நம் அரசியல்வாதிகள்.கூட்டிக் கழித்துப் பார்த்தால், இங்கு யாருமே ஜனநாயக வழியில் ஆட்சி செய்யவில்லை என்பதே நிதர்சனம். ஆனால் சற்றும் கூச்சமில்லாமல், ஜனநாயகத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல நடிக்கின்றனர்.நேருவுக்குப் பின் இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என, காங்கிரஸ் கட்சி பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்த இந்த ஜனநாயகப் படுகொலை, இன்றும் பல மாநிலங்களில் வாழையடி வாழையாக தொடர்கிறது.விளக்கெண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய் போல கொள்கை கொண்ட, 28 கட்சிகள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற புறப்பட்டு, இன்று தங்களையே காப்பாற்ற முடியாமல் தடுமாறி தவிக்கின்றன.பீஹாரில் ஆண்டுதோறும் கூட்டணியை மாற்றும் நிதீஷ் குமார், முதல்வர் பதவியில் மட்டும் பசை போல ஒட்டிக் கொண்டிருக்கிறார். நேற்று வரை, தன் பக்கத்தில் இருந்தவர்களை இன்று எதிரிகளாக்கி வசைபாடுகிறார்.'மக்களாட்சிக்கு புது அர்த்தம் கொடுத்த நாம், உண்மையான மக்களாட்சி பற்றி வாய் கிழிய இப்படி பேசுகிறோமே... இதைக் கேட்டு மக்கள் என்ன நினைப்பர்' என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. மக்களும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. ஆக, இன்று பாரதத்தில் ஜனநாயகம் என்ற வார்த்தை சிரிப்பாய் சிரிக்கிறது. மக்களுக்காக, மக்களைக் கொண்டு, மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பதை, 'சொந்த மக்களுக்காக' என்று மாற்றி கேலிக்கூத்தாக்கி விட்டனர்.உண்மையில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்விருந்தால், வலிமையான ஓட்டு எனும் ஆயுதம் மக்கள் கையில் தான் உள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல், 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம்' என்ற பெயரில் கூத்தடிக்கும் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தவே முடியாது!

புதிய கட்சிகளை உருவாக்கும் தி.மு.க.,

கோ.தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளார்.இக்கட்சி உருவாவதற்கும், இதற்கு முன் பல கட்சிகள் உருவானதற்கும் தி.மு.க.,வே காரணமாக இருந்துள்ளது.முதலில், அண்ணாதுரை தலைமையில் கட்சி இருந்தபோது, அதில் எம்.ஜி.ஆர்., தன் நடிப்பாலும், வசீகரத்தாலும் தி.மு.க., வளர பெரும் காரணமாக இருந்தார். அண்ணாதுரை மறைவுக்கு பின், எம்.ஜி.ஆர்., முன் மொழிந்ததால், கருணாநிதியால் தி.மு.க., தலைவராகவும், முதல்வராகவும் வரமுடிந்தது.பின், எம்.ஜி.ஆர்., கட்சியின் வரவு -- செலவு கணக்கை கேட்டார் என்பதாலேயே, அவரை தி.மு.க.,வில் இருந்த வெளியேற்றியதன் காரணமாக, அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., உருவாக்கினார்.அதுபோல தன் பேச்சு திறமையால், தி.மு.க., வளர பெரும் காரணமாக இருந்தவர் வைகோ. அவரது வளர்ச்சியால், தன் மகன் ஸ்டாலினுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, கருணாநிதியால் தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோவால் ம.தி.மு.க., என்ற இயக்கம் உதயமானது.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு செயலராக இருந்த, நடிகர் டி.ராஜேந்தரின் வளர்ச்சி பிடிக்காமல், அவர் வெளியேற்றப்பட்டதால் உருவானது தான், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்.தன் திருமணத்தையே கருணாநிதி தலைமையில்நடத்தி, தி.மு.க.,வின் தீவிர விசுவாசியாக இருந்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். அவரின் வளர்ச்சியை பிடிக்காமல், அவருடைய திருமண மண்டபத்தை இடித்ததன் காரணமாக உருவானது தான், தே.மு.தி.க., கட்சி.மேற்கூறிய அனைவருமே தி.மு.க., வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி யவர்கள். ஆனால், நடிகர் விஜய் அப்படி இல்லை. திரைத்துறையில் இவரது அசுர வளர்ச்சி, உதயநிதி அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்து விடுமோ என்ற அச்சத்தால், விஜய் படங்களுக்கு தியேட்டர் கொடுக்காதது உட்பட பல்வேறு இடையூறுகள் செய்ததன் காரணமாக உருவானது தான், தமிழக வெற்றி கழகம்.எது எப்படியோ... தமிழகத்தில் பல கட்சிகள் உருவானதற்கு தி.மு.க.,வே காரணமாக இருந்துள்ளது. இன்னும் எத்தனை கட்சிகள் உருவாகுமோ?

ராகுலின் நாடகம் இங்கு எடுபடாது!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------மரகதம் சிம்மன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாம்' என்பது போல், ஜார்க்கண்டில் உள்ள புகழ் பெற்ற பாபா வைத்தியநாதர் கோவிலில், சமீபத்தில் காங்., - எம்.பி., ராகுல் வழிபாடு நடத்தியுள்ளார்.அப்போது சட்டையின்றி, பட்டு வேட்டி, துண்டு அணிந்து, நெற்றியில் பெரிய விபூதி பட்டை, குங்குமம் இட்டு, பயபக்தியுடன் பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்துள்ளார்.கடந்த மாதம் நடந்த அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையின் போது, மக்கள் வெள்ளமாக திரண்டு அந்நிகழ்ச்சியை பரவசத்துடன் தரிசித்தனர். பிரதமர் மோடி நடத்திய பிராண பிரதிஷ்டையை நாட்டின் பிரபல சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலரும் நேரில் வந்து, தரிசித்தனர்.இதைக் கண்டு, காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளும் கொஞ்சம் மிரண்டு தான் போய் விட்டன.'இனிமேல் சாமியில்லை, நான் வெளிநாட்டு ரத்த சம்பந்தமுள்ளவன் என்று நினைப்பதால் லாபமில்லை' என்று நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார் அல்லது புரிய வைக்கப்பட்டுள்ளார் ராகுல்.'இனிமேல் கும்பலோடு சேர்ந்து நாமும் கோவிந்தா போட்டால் தான் பிழைக்க முடியும்' என்றும் அறிந்து கொண்டு விட்டார்.பொதுவாக, வடமாநில மக்கள் ராம பக்தியிலும், கிருஷ்ண பக்தியிலும் ஊறியவர்கள். 'ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடி கறக்கணும்' என்பர்.அதனால், எப்படியாவதுவடமாநில மக்களை கவர்ந்து தேர்தலில் ஓட்டுகளை அள்ளணும் என்று நினைத்து விட்டார் போலும்.ஆனால், தமிழகத்தில் ஈ.வெ.ரா., கொள்கைகளில் ஊறியவர்களும், கேரளாவில் கம்யூனிசம் ஓங்கி இருப்பதாலும், ராகுலின் ஆட்டம் இங்கு எடுபடாது. தென் மாநிலங்களுக்கு வந்து, இதே பக்தி நாடகத்தை போட்டால் எடுபடாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை