உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பணம் வாங்குபவர்கள் சிந்திக்க வேண்டும்!

பணம் வாங்குபவர்கள் சிந்திக்க வேண்டும்!

கி.முத்துகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'அயோத்தி ராமர் கோவில் திறப்பை, பா.ஜ.,வின் திருவிழாவாக மாற்ற நினைப்பதா' என்று, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'இறை நம்பிக்கை ஒவ்வொரு மனிதரின் விருப்பமும், உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல... ஆன்மிக அறங்களுக்கே எதிரானதும் ஆகும். 'கோவில் கட்டுவதையும், திறப்பதையும் தன் கட்சியின் சாதனையாக காட்டி, மக்களை ஏமாற்ற பா.ஜ., அரசும், பிரதமர் மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கதல்ல' என்றும் கூறியுள்ளார். இவர் ஏன் இப்படி கொதிக்கிறார், குமுறுகிறார்?இறை நம்பிக்கை, ஒவ்வொரு மனிதரின் விருப்பமும், உரிமையும் ஆகும் என்று 'யாருக்குமே தெரியாத' ஒரு உண்மையை தெரிவித்துள்ளார்.சரி... மத்திய அரசு வெள்ள நிவாரண உதவித் தொகைக்காக அனுப்பும் பணத்தை, நேரடியாக பயன்பாட்டாளர் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், அந்த பணத்தை ஒரு கவரில் போட்டு, அந்த கவரின் மேல் ஸ்டாலின் படத்தையும் போட்டு, ஏன் வினியோகிக்க வேண்டும்? 'மக்களுக்கு நன்மை செய்வதன் வாயிலாக அல்லாமல், மக்களை ஏமாற்றுவதன் வாயிலாக வெல்ல முடியுமா என்று பா.ஜ., கட்சி பார்க்கிறது' என்று சொல்லும் பாலு, மேற்படி வெள்ள நிவாரண உதவித்தொகை விஷயத்தில் எதை நினைத்து இப்படி செய்கின்றனர்?'மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண தொகை வரும்; அதை முதல்வர் படம் போட்ட கவரில் கொடுக்க வேண்டும்' என்று, வருமுன் யோசித்து, கவரை முன்னதாகவே அச்சிட்டு வைக்கும் தமிழக அரசு, இதேபோல் சென்னை வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஒரு முறையாவது வருமுன் யோசித்துள்ளதா? ஒரு பேச்சுக்கு ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினர், 'தி.மு.க.,விற்கு எங்கள் ஓட்டு கிடையாது' என்று, சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு தி.மு.க.,காரராவது ரம்ஜானுக்கு கஞ்சியோ, கிறிஸ்துமசுக்கு கேக்கோ சாப்பிடுவாரா? பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள், இது குறித்து சிந்திக்க வேண்டும்!

அமைச்சரின் மிரட்டல் பேச்சு சரியல்ல!

கே.மணிவண்ணன், நடுபாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'அரசு மருத்துவமனைகளில் நிகழும் அவலங்களை வீடியோ எடுத்து வெளியிட்டால், கடும் தண்டனை வழங்கப்படும்' என்று, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். அவரது மிரட்டல் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது.இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுப்பது, தரை துடைக்கும் குச்சியில் நோயாளிக்கு குளூக்கோஸ் ஏற்றுவது, படுக்கை இருந்தும் நோயாளியை தரையில் படுக்க வைப்பது, நோயாளிகளிடம் இளம் டாக்டர்கள் ஒருமையில் பேசுவது, கேட்டால், 'எங்கு வேண்டுமானாலும் சொல்லி கொள்' என்று ஆணவமாக மிரட்டுவது என்று, அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அடாவடிகள் ஒன்றா, இரண்டா...கடந்த மாதம் சிகிச்சைக்கு சென்ற ஒரு நோயாளியிடம், கோவை அரசு மருத்துவமனை ஊழியர்கள், 'மருந்து இல்லை... வெளியே போய் வாங்கி வா' என்று ஒருமையில் சொல்லி அனுப்பியுள்ளனர்.பொதுவாக மக்கள், மருத்துவமனைக்கு சுகாதாரம் பேணவே வருவர். ஆனால், இங்கோ கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் இருப்பதால், மக்கள் வியாதியஸ்தராக வெளியில் வரும் அவலம் தொடர்கிறது. பெரும்பாலான மருத்துவ மனைகளில் சுகாதாரமற்ற குடிநீரே கிடைக்கிறது. சரிவர துாய்மை பணி மேற்கொள்ளாத அரசு மருத்துவமனைகள் பெருமளவில் உள்ளன.இந்த அவலங்களை யாராவது வெளி கொண்டு வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுவது சரியல்ல.அப்படி என்றால், அவலங்களை அம்பலப்படுத்துவது தவறு என்று அமைச்சர் சொல்ல வருகிறாரா? நம் முதல்வருக்கு, நுாற்றாண்டு விழா கொண்டாடுவதிலும், தந்தைக்கு சிலை திறப்பதிலும் நேரம் சரியாக இருப்பதால், இவற்றை கவனிக்க நேரமில்லை. மக்கள் நிலை தான், அந்தோ பரிதாபம்.

சைபர் மோசடிகளுக்கு விழிப்புணர்வு தேவை!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில் சமீபத்தில் வெளியான, 'அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் நிர்மூலமாக்குவது அவசியம்' தலையங்கம் படித்தேன்.பொதுவாக, இன்று மொபைல் போன் வாயிலாக, நமக்கு தேவையில்லாத அழைப்புகளில், நாம் தேவையில்லாமல் பேசும் போது தான், பிரச்னைகளில் சிக்கி கொள்கிறோம். அதில் பெரும்பாலும் இனிய பெண்கள் குரலில் வரும்போது, எளிதாக சிக்கி பணத்தை இழக்கின்றனர். இதில் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் சென்று விடுகின்றனர். உண்மையில் இது போன்ற அழைப்புகளில், 'உங்களுக்கு லோன் வேண்டுமா அல்லது ரூபாய் 1,000 முதலீடு செய்யுங்கள்; ஒரே மாதத்தில் ரூபாய் 10,000 கிடைக்கும்' என்பது போன்ற கவர்ச்சி துாண்டிலை வீசும்போதே, நாம் அந்த இணைப்பை துண்டித்து விடலாம். நாம் குறுக்குவழியில் பணக்காரர்களாக மாற வேண்டும் என்ற ஆசையை விட்டு விட்டாலே போதும்.மேலும், சைபர் கிரைம் குற்றவாளிகள் கடந்த 2021 - 2-3 வரை 10,300 கோடி ரூபாய் ஏமாற்றி உள்ளதும், அதில், 10 சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதும் மிக அதிர்ச்சியான விஷயம். இதில், சைபர் கிரைம் குற்றவாளிகள், எந்தளவுக்கு நுாதனமாக மோசடி செய்கின்றனர் என்பதை நாம் அறிய முடிகிறது.இனி, நாம் ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ள சைபர் கிரைம் திருடர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடையே விளம்பரம் வாயிலாகவும் விழிப்புணர்வு செய்யலாம். மேலும், பிரபல சைபர் கிரைம் காவல் துறை அதிகாரிகளை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்து, அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். கடைசியாக, 'தினமலர்' நாளிதழ் தலையங்கத்தின் யோசனைப்படி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இதை முற்றிலும் நிர்மூலமாக்குவது காலத்தின் கட்டாயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜன 18, 2024 06:38

'அடித்தது தப்பில்லை, மச்சான் சிரித்ததுதான் குற்றம்' என்பது பழமொழி அரசு மருத்துவமனைகள் மிகக்கேவலமாக இருக்கலாம் அது வெளியே கொணர்ந்தால்தான் குற்றம், தண்டனை பேஷ் நல்ல அமைச்சர்


Dharmavaan
ஜன 18, 2024 04:01

அரசு மருத்துவமனை அவலங்களை வெளிக்காட்டுவது அடிப்படை உரிமை கோர்ட் தலையிட்டு தடுக்க வேண்டும்


புதிய வீடியோ