உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / முத்தரசன் சொல்வது முற்றிலும் சரிதான்!

முத்தரசன் சொல்வது முற்றிலும் சரிதான்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. மத்திய அரசு, தமிழகத்துக்கு உரிய நிதியை கொடுக்க மறுக்கிறது' என்று வருத்தம் தெரிவித்துள்ளார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன். கூட்டணி கட்சிக்காரரான இவருக்கு இருக்கும் அக்கறையும், ஆதங்கமும் மத்திய அரசுக்கு இல்லாமல் போனது, துரதிருஷ்டமானது தான். பாவம், தமிழக அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடி கொஞ்சமா, நஞ்சமா? ஆட்சிக்கு வந்ததில் இருந்து, முக்கியமான பல விஷயங்களுக்கு நிதி ஒதுக்கி வருவதை மக்கள் அறிவர்... முன்னர், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திய தன் தந்தை கருணாநிதிக்கு கடல் நடுவே பேனா வைக்க வெறும், 81 கோடி மட்டும் தானே முதல்வர் ஒதுக்கியுள்ளார். கருணாநிதி மட்டும் அன்று பேனா பிடித்து எழுதாமல் இருந்திருந்தால், தமிழ் செத்தல்லவா போயிருக்கும். நினைத்துப் பாருங்கள் மக்களே... நாக்கு மேல் பல்லை போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் சீமான்களே, சீமாட்டிகளே, உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்...கருணாநிதி இல்லா விட்டால் குறளோவியமும், தொல்காப்பிய பூங்காவும் இல்லாமல், வெறும் சங்க இலக்கியமும், ஐம்பெரும் காப்பியங்களை மட்டுமே வைத்து, தமிழன்னை ஏங்கி தவித்திருக்க மாட்டாளா... அந்த ஏக்கத்தைப் போக்கி, வாட்டத்தை நீக்கிய அவருக்கு கடலில் பேனா சின்னம் வைப்பது கூட குறைவு தான்...முடிந்தால், இமயத்தின் உச்சியில் வைத்து கூட சிறப்பு செய்யலாம். அவரது சீரிய புகழ், நம்மோடு நின்று விடாமல், வெளிநாடுகளில் கூட பரவ செய்யலாம். ஆங்காங்கே உள்ள கடலிலோ, ஏரிகளிலோ அவரது பேனாவை நிறுவி, தமிழனின் பெருமையை திரைகடல் கடந்தும் பரவ செய்யலாம்.பேனாவை விடுங்கள்... கருணாநிதி விளையாடிய மைதானம், குளித்த குளம், படித்த பள்ளி என்று பல இடங்களில், அவருக்கு சிலைகள் பல வைக்க வேண்டிய தலையாய கடமைகள் தமிழக அரசுக்கு உள்ளன.அதற்கெல்லாம் யார் பொருள் தருவர். ஈவு, இரக்கம் இல்லாத மத்திய அரசு, இதற்கெல்லாம் நிதி ஒதுக்கவில்லை என்பது, முத்தரசன் சொல்வது போல ஓரவஞ்சனை தான். இப்படி முக்கிய செலவுகளுக்கே நிதி நெருக்கடியால் திண்டாடும் தமிழக அரசுக்கு, மத்திய அரசு ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டியிருக்க வேண்டாமா?வெள்ளம் வரும், போகும்; ஆனால், கருணாநிதி போன்ற மனிதர்கள் எப்போதாவது தான் வருவர். இதை முத்தரசன் மாதிரி, கூட்டணிக்கு ஜால்ரா தட்ட தெரியாத, கொள்கை பிடிப்பில்லாத யாராலும் புரிந்து கொள்ள இயலாது.

ரகுராம் ராஜன் கருத்து உண்மையா?

பா.ராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடந்த, 'கலைஞர் 100' விழாவில் பேசிய ரஜினி, கலைஞரை புகழ்வதாக எண்ணி, சம்பந்தமில்லாமல் உளறி கொட்டினார். ஒரு வகையில், அவரை அதற்காக குறை கூற முடியாது; குறை கூறவும் கூடாது.ஏனெனில், ஆளுங்கட்சியின் தயவும், தாட்சண்யமும் ரஜினிக்கு மிக மிக அவசியம். தவிர, ஆளுங்கட்சியின் ஆக்டோபஸ் கரங்களில் ஒன்றான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ரஜினிக்கு சம்பளம் தந்து, படம் எடுத்து கொண்டிருக்கிறது.அதனால், எந்த வாயால், 'இந்த நாட்டில் சிஸ்டம் சரியில்லை' என்று விளம்பினாரோ, அதே வாயால், கருணாநிதியை இந்திரன், சந்திரன், சூரியன் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி, புளகாங்கிதம் அடைந்து இருக்கிறார்.அதனால், ரஜினி பாராட்டியது அவருடைய குடும்பம் மற்றும் சொத்துக்கள் மற்றும் தொழில் தொடர்புடையது. ஆனால், ரிசர்வ் வங்கி யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தமிழக அரசை பாராட்டி பேட்டி யளிக்க வேண்டிய அவசியம் என்ன?திராவிட மாடல் ஆட்சியால், ரகுராம் ராஜனுக்கு காரியம் ஏதாவது ஆக வேண்டுமா? கட்டணமில்லா பேருந்து திட்டம் வாயிலாக, பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக அள்ளி விட்டுள்ளார்.நாம் அறிந்த வரையில், பெண்களுக்கு அப்படி அதிக வேலை வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை. வேலையில் இருப்போர் தான், கட்டணமில்லா பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனரே தவிர, வேலை தேடும் பெண்கள் யாரும் இலவச பஸ்களில் பயணித்து, வேலை வாய்ப்பு பெற்றதாக தெரியவில்லை.ரகுராம் ராஜன், மத்திய அரசு பணியில் இருந்தவர். மத்திய அரசை பாராட்டி பேட்டி அளித்தாலும் அதில் அர்த்தம் உண்டு. சிறிதும் சம்பந்தம் இல்லாத திராவிட மாடல் ஆட்சியின் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை சிலாகித்து பேட்டியளித்து, தன் தகுதியை குறைத்து கொள்ள வேண்டுமா?

கிரிவல பாதையில் அசைவம் தேவையா?

பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கோவில் பகுதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அரசின்சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி வாக்கு கொடுத்ததுடன் நின்றுவிடாமல், பக்தர்களுக்கு உதவும் வகையில், பழனி மலை அடிவாரம் மற்றும் கிரிவல பாதைகளில், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அரசின் செயலை வரவேற்கலாம்.'பழனி கோவிலை சுற்றி யுள்ள வீதிகளை, இனி வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்' என்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால், 'அரசியல்வியாதிகள்' துணையுடன் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறலாம்.அதே போல், சமீபத்தில் திருவண்ணாமலை வந்து சென்ற கவர்னர் ரவி, கிரிவலப் பாதையில் போதிய கழிப்பறைகள் இல்லாததை கண்டும், அசைவ உணவுகள் விற்கும் உணவகங்கள் இருப்பதை கண்டும் வருந்தியதாக கூறினார். 'அருணாசலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்' என்றும் கூறினார்.உடனே அமைச்சர் வேலு, 'கிரிவல பாதையில் அசைவ உணவகங்களை அகற்றும் விவகாரத்தில் அரசு எதுவும் செய்ய முடியாது' என்று கைவிரித்து விட்டார்.கவர்னர் மீதான கோபத்தில் அமைச்சர் வேலு இப்படி கூறினாரா என்பது தெரியவில்லை. கவர்னர் கூறினார் என்பதற்காக செய்யா விட்டாலும், பலநாள் விரதம் இருந்து, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு, அசைவ உணவின் மணம், அவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறாகவே இருக்கும். எனவே, கிரிவல பாதையில் உள்ள அசைவ உணவகங்களைஅகற்றி, பக்தர்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை