எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 10 ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது' என, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி குற்றம் சாட்டி இருக்கிறார்.கடந்த 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாடு இருந்த நிலையையும், நாட்டு மக்கள் வாழ்ந்த காலத்தையும் சற்று பின்னோக்கி பார்த்தோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு எவ்வளவு சுபிட்சமாக, தன்னிறைவு பெற்று, எவ்வித குறையும் இல்லாமல் இருந்தது?கங்கையிலும், காவிரியிலும் தண்ணீரா ஓடியது? தேனும், பாலும் அல்லவா கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக, சுபிட்சமாக, கடனோ, உடனோ இன்றி அவரவர் சொந்த வீடுகளில் வாழ்ந்தனர். வேலை இல்லாத ஒரு இளைஞனை கூட காண முடியாதே.பொருளாதாரத்தில் நாடு எவ்வளவு தன்னிறைவு பெற்று விளங்கிக் கொண்டிருந்தது. அதன் விளைவு? உலக வங்கியும், சர்வதேச நிதியமும் நம்மிடம் கடன் வாங்க, காத்து கிடந்தன.வெளிநாடுகளுக்கும், உலக வங்கிக்கும் கடன் வழங்கியது போக, மீதி இருந்த நிதியை, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற உள்ளூர் பிரமுகர்களுக்கும் கடன்களாக வாரி வழங்கி, அவர்கள் வெளிநாட்டுக்கும் தப்பியோட வழி வகுத்து கொடுத்த ஆட்சி அல்லவா.காங்., ஆட்சியின் ஊழல்களை போபர்ஸ், டெலிகாம், 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, சர்க்கரை, நிலக்கரி என, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாமே.ஆனால், இந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் ஒரு ஊழல் புகாரை அழகிரியால் சுட்டிக்காட்ட முடியுமா? இந்த, 100 லட்சம் கோடி கடன்களை மத்திய அரசு வாங்கியிருந்தாலும், 10 ஆண்டுகளில் நம் பொருளாதாரம் அதை விட, பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்திருப்பதை கவனிக்க தவறியதேன்?என்னமோ, இந்த 100 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் அவர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றதை போல அழகிரி பேசுகிறாரே... 10 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சியை பார்க்காமல், பா.ஜ.,வை குறை சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காகவே, அழகிரியின் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. மாலத்தீவு சுற்றுலா வருவாயில் 'துண்டு!'
கே.நாகலட்சுமி,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாலத்தீவில்,
முஹமது முய்சு அதிபராக பதவியேற்ற பின் இந்தியாவிற்கு எதிராக, சீனாவிற்கு
ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அங்கிருந்த நம் ராணுவத்தை திருப்பி
அனுப்பி, சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறார். அது, அவர்கள் கொள்கை
முடிவு, அதை யாரும் விமர்சிக்கவில்லை.ஆனால், சமீபத்தில் லட்சத்தீவு
சென்ற நம் பிரதமர் மோடி, அங்கு கடலுக்கு அடியில் சென்று அதன் அழகையும்,
கடற்கரையின் அழகையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இந்தியர்கள் அங்கு
சுற்றுலா செல்லுமாறு பதிவிட்டிருந்தார்.உடனே, மாலத்தீவில் உள்ள
சமூக ஊடகர்கள் பொங்கி விட்டனர். லட்சத்தீவிற்கு எதிராக, மாலத்தீவிற்கு
ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். ஆனால், இவை அனைத்தையும் விட பொறுப்பான
பதவியில் இருக்கும் மூன்று அமைச்சர்கள், நம் நாட்டிற்கும், பிரதமருக்கும்,
ஹிந்து மதத்திற்கும் எதிராக வலைதளத்தில் கடும் விமர்சனங்களை
பதிவிட்டிருந்தனர்.இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள்
நாட்டின் மதம், கலாசாரம், உரிமையில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியுஜா, பிரதமர் மோடியை கிண்டல் செய்து,
'கோமாளி நரேந்திர மோடி, பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து கடலில் குதிக்கிறார்'
என்று வெறுப்பாக பதிவிட்டிருந்தார்.அந்நாட்டிற்கு இந்தியா செய்த
உதவிகள் ஏராளம். அதை மறந்து, நம் பிரதமரை விமர்சிப்பதை ஏற்க முடியாது. அந்த
மூன்று அமைச்சர்களுக்கும் இந்தியர்கள் சொல்ல விரும்புவது... எங்கள்
பிரதமர், எங்களின் சுற்றுலாவை ஊக்கப்படுத்த, அவரின் 73 வயதிலும் கடலில்
இறங்கி உள்ளார்.ஆனால், மாலத்தீவு அமைச்சர்களின் இந்த பொறுப்பற்ற பதிவால், அவர்கள் நாடு தான் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும். ஏனெனில்,
மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் ஏழு பேரில் ஒருவர் இந்தியர். இனி,
இந்தியர்கள் அங்கு சுற்றுலா செல்வது கடினம். லட்சத்தீவு, அந்தமான் போன்ற
அழகான கடற்கரை தீவுகளின் பக்கம் இந்தியர்களின் கவனம் திரும்பி விட்டதால்,
மாலத்தீவின் சுற்றுலா வருவாயில் பெரிய, 'துண்டு' விழும் என்பதில் சந்தேகமே
இல்லை! பாராட்டுக்குரிய பணி நியமன நிபந்தனை!
ஸ்ருதி
ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: அரசு துவக்க பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை
நிரப்ப, 1,500 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு
பள்ளிக்கல்வி துறை அனுமதி வழங்கி, உத்தரவிட்டுள்ளது.மேலும்,
'அவர்களை, பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை
அளித்து, அங்கேயே குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது பணியாற்ற வேண்டும் என்ற
நிபந்தனையுடன் நியமிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்
துறையின் செயலை வரவேற்கிறேன்.ஏனென்றால், 10 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கு, 1980ல் பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்
இன்றுவரை, 44 ஆண்டுகளாகவே, தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள்
பின்தங்கியே உள்ளன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், போதுமான
ஆசிரியர்கள் இல்லாமல், எப்போதும் ஏராளமான பணியிடங்கள்காலியாகவே இருப்பது
தான் முக்கியமான காரணம்.வட மாவட்டங்களில் நியமனம் செய்யப்படும்
ஆசிரியர்களும், அடுத்த சில மாதங்களிலேயே அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு
கொடுக்க வேண்டியதை கொடுத்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கே பணி மாறுதல்
வாங்கி சென்று விடுகின்றனர்.இந்த அவல நிலையை மாற்ற, 'பணி நியமனம்
செய்யப்படும் இடங்களிலேயே குறைந்தது, ஐந்து ஆண்டுகளாவது அவர்கள் பணியாற்ற
வேண்டும்' என்ற நிபந்தனை நிச்சயமாக உதவும். அரசின் இந்த நல்ல முயற்சி
வெற்றி பெறட்டும்.'எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட
மாடல்' என்று கூறும் ஆட்சி யாளர்கள், பணமில்லை என்று பஞ்சப்பாட்டு பாடாமல்,
தமிழகம் முழுதும் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களுக்கு
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் போதுமான
கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு
கிடைக்கும் தரமான கல்வி, அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் நிலையை
உருவாக்க வேண்டும்.