உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  தவெக வின் சவாலை திமுக ஏற்குமா?

 தவெக வின் சவாலை திமுக ஏற்குமா?

எஸ்.ராமையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொங்கல் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தில், வேட்டியின் அளவு எட்டு முழத்தில் இருந்து, நான்கு முழமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு முழ வேட்டி தயாரிப்பதற்கு, தறி, அச்சு மாற்ற வேண்டி உள்ளது. எட்டு முழ வேட்டியை விட நான்கு முழ வேட்டியின் தரம் குறைவு' என்று சட்டசபையில் குறிப்பிட்டுள்ளார், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆஸ்டின்.பிள்ளையே பிறக்கவில்லையாம்... அதற்குள், 'என் பிள்ளையை போல் உண்டா... எட்டு ஊரை கட்டி அடிப்பான்' என்றாளாம் ஒருத்தி!அதுபோல், வேட்டி தயாரித்து வெளிவருவதற்கு முன், அந்த வேட்டியின் தரம் குறைவாக தான் இருக்கும் என்று, ஆஸ்டின் எப்படி கண்டுபிடித்தார்?தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகைக்கு, 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனத்தின் எட்டு முழ வேட்டி வினியோகிக்கப்பட்டது போலவும், தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அந்த வேட்டியின் தரத்தை குறைத்து, காடா துணியில் நான்கு முழ வேட்டி தயாரித்துத் தர திட்டமிட்டிருப்பது போலவும் உள்ளது, ஆஸ்டினின் குற்றச்சாட்டு.'பொங்கல் பண்டிகைக்கு அமைச்சர்கள், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள், நான்கு முழ வேட்டி கட்டி வருகிறோம்; எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே அவர்கள் ஆட்சியில் வழங்கிய எட்டு முழ வேட்டியை கட்டி வரட்டும். அப்போது, மக்கள் பார்த்து எது தரமானது என்று தெரிந்து கொள்வர்' என்று, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சவால் விடுத்துள் ளார், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி.சவாலை ஆஸ்டினும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் ஏற்று, பொங்கல் பண்டிகை அன்று, தங்கள் ஆட்சியில் இலவசமாக கொடுத்த வேட்டியை அணிந்து சபைக்கு வருவரா?

கடவுளே தவறு செய்யலாமா?

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருத்துவத் துறையின் தாத்பரியமே சேவை என்பது தான். ஆனால், இன்று பெரும்பாலான மருத்துவர்களுக்கு சேவை என்பது அவ்வப்போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போன்று ஆகிவிட்டது. கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில், கடந்தாண்டு ஜூலையில், வினீஷ் - -அஞ்சு என்ற தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மஞ்சள் காமாலை நோய்க்காக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை, வீடு திரும்பியது முதல் அழுதபடியே இருந்து உள்ளது. அதன், விலா எலும்பு பகுதிக்கு அருகே வீக்கம் இருக்கவே, பெற்றோர், குழந்தையை டாக்டரிடம் காட்டி உள்ளனர். எதனால் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதிக்காமலேயே, 'இது சாதாரண வீக்கம் தான்; போகப் போக சரியாகிவிடும்' என்று அந்த பெற்றோரை அனுப்பி வைத்து உள்ளார், டாக்டர். ஆனால், நாளுக்கு நாள் வீக்கம் பெரிதானதுடன், சதா அழுது கொண்டு இருக்கவே, கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், விலா எலும்புக்கு அருகே ஊசி ஒன்று இருப்பதை கண்டுபிடித்து, அதை அகற்றியுள்ளனர். இப்போது குழந்தை நன்றாக இருந்தாலும், இந்த ஓராண்டு காலத்தில் அந்த பச்சிளம் குழந்தை எவ்வளவு வலியை அனுபவித்திருக்கும்? தங்கப்பதக்கம் என்ற திரைப்படத்தில், நேர்மையான காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சிவாஜி கணேசன், குற்றவாளியான தன் மகனைப் பார்த்து கலங்கி நிற்கும் போது, அவரது மருமகள், 'மாமா... காய்ஞ்சு போன பூமி எல்லாம், வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா, அது யார்கிட்ட போய் முறையிடும்?' என்று கேட்பார். அதுபோன்று, நோய் உபாதையில் நொந்து போய், தங்கள் வேதனை குறையும் என்று நம்பி மருத்துவ ரிடம் வருகின்றனர் மக்கள். தங்கள் அலட்சியத்தால் அவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கினால், மக்கள் எவரை தான் நம்புவர்? மருத்துவர்களே... நீங்கள் செய்வது தொழில் அல்ல; மனித குலத்திற்கு செய்யும் தர்மம்! கண்ணுக்கு தெரியாத கடவுள் கொடுத்த உயிரை காப்பாற்றும், கண்ணுக்கு தெரிந்த கடவுள்கள் நீங்கள். அப்படிப்பட்ட நீங்களே தவறு செய்யலாமா?

ஓய்வூதியர்கள் மீது முதல்வரின் பார்வை படுமா?

மு.பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), சிவகங்கையில் இருந்து எழுதுகிறார்: ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்திஉள்ளது, தமிழக அரசு. இத்திட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட நோய்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை எடுக்க வேண்டுமென்று விதி கூறுகிறது. நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்; மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளேன். 2023ல் இதயநோய் ஏற்பட்டு, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், மதுரையில் ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையில் ஒன்பது நாட்கள் சிகிச்சை பெற்றேன். சிகிச்சை செலவாக, 1,53,319 ரூபாய் செலுத்திய பின் தான், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டேன். இன்சூரன்ஸ் கம்பெனியினரிடம், கட்டணமில்லாத சிகிச்சை அடிப்படையில் முழு தொகையையும் வழங்கும்படி கேட்டபோது, 'பேக்கேஜ்' அடிப்படையில், 42,788 ரூபாய் மட்டும் வழங்குவதாக கூறி, கழன்று கொண்டனர். இதனால், மீதித் தொகையை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் கம்பெனி மீது வழக்கு தொடுத்தேன். கடந்த 2025ல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றமும், பாக்கித் தொகையை, மனு தாக்கலான தேதி முதல், உத்தரவிட்ட தேதி வரை ஆண்டுக்கு, 6 சதவீத வட்டியுடன் எனக்கு கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. இன்சூரன்ஸ் கம்பெனி அத்தீர்ப்பை செயல்படுத்தாமல், மதுரை நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில், 'ஸ்டே' வாங்கியது. தற்போது, வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வருவதற்குள், நான் உயிருடன் இருப்பேனா என்பது தெரியவில்லை. ஏனெனில், என் வயது, 88. எனவே, கேரளாவில் உள்ளது போல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். கடந்த தி.மு.க., அரசு, மத்திய அரசின், 'ஆயுஷ்மான்' மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஆனால், இத்திட்டம், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் கொடுக்கும் முதல்வர், ஓய்வூதியர்களின் மீதும், தன் கடைக்கண் பார்வையை காட்ட வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 10, 2026 20:40

இதேபோல். பெண் உறுப்பினர்களும். ரேஷன். சேலையை. அணிந்து. வருவார்களா? அதுவும். ஒருமுறை. துவைத்தபின். உள்ள. நீள. அகலங்கள், நிறங்களுடன் ?


Lakshminarasimhan
செப் 10, 2026 07:54

அந்த எட்டுமுழம் வேட்டி கிழிந்து இப்போ நான்கு முழம் ஆகி இருக்குமே என்ன செய்ய இந்த சவாலை த வெ க அமைச்சர் ஏற்பாரா ?


Anantharaman Srinivasan
செப் 10, 2026 19:52

No meaning in this comments


முக்கிய வீடியோ