உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜ் பேச்சு: மாற்றத்தை எதிர்பார்த்து தான் சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வை மக்கள்தேர்ந்தெடுத்தனர். நான்கு மாத ஆட்சியில், மக்களுக்கு விரோதமாகத்தான் அ.தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வி திட்டம், அரசு கேபிள் ஆகியவற்றில், மக்களின் விரோதத்தை அரசு பெற்றுள்ளது.இலவச திட்டங்கள் செப்டம்பருக்குள் வழங்கப்படும் என, அரசு அறிவித்தும், இதுவரை முழுமையாக திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: இந்தியாவிலேயே கூட்டணிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த ம.தி.மு.க., வீசி எறியும் சீட்டிற்காக மண்டியிடும் இயக்கம் அல்ல என்பதை, கடந்த தேர்தலில் நிரூபித்தோம்; நாம் பணம் வாங்கி விட்டோம் என்றவர்கள், தேர்தலை புறக்கணித்ததும், வாயடைத்தும் போய் விட்டனர். கடந்த தேர்தலைப் புறக்கணித்த பின், மக்களிடம் நம் மீதான நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா பேட்டி:மன்மோகன் அரசு மீது, மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இவர் பிரதமர் பதவியை விட்டு இறங்கி, இன்னொரு காங்கிரஸ்காரர் அந்த இடத்தில் அமர்ந்தாலும், அரசுக்கு உண்டான நெருக்கடி நீங்காது.

காங்கிரஸ் பொதுச் செயலர் ஞானசேகரன் பேட்டி: அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருப்பதால், பணபலம், அதிகார பலம் காரணமாக எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், வெற்றி பெறுவது சந்தேகம் தான். தனித்து நிற்கும் போது, பெரிய வலிமை கிடைக்கிறது என்று சொல்ல முடியாது. எனினும், உள்ளூர் பிரச்னைகளின் அடிப்படையிலும், சொந்த செல்வாக்கை வைத்தும் காங்கிரஸ் தொண்டர்கள் போராடி வெற்றி பெறுவர்.

காங்கிரஸ் எம்.பி., அழகிரி பேச்சு: மத்திய அமைச்சர் சிதம்பரம், கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தினார்; மாணவர்களின் உயர் கல்விக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி வழங்கவில்லையென, ஜெ., கூறுகிறார். இவர்கள் கேட்டதை விட, திட்டக் கமிஷன் 500 கோடி ரூபா# அதிகமாக ஒதுக்கியுள்ளது. இவர்கள் வழங்கும் இலவசத் திட்டங்களுக்கும், மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்கின்றனர்.

பா.ஜ., மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் பேட்டி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், உள்துறை அமைச்சராக நீடிக்கும் உரிமையை சிதம்பரம் இழந்துவிட்டார். அவராகவே அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன் சிங், டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அடுத்தடுத்து ஊழல்கள் அம்பலமாகி வருவதால், ஐ.மு., கூட்டணி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் பேட்டி: சென்னை மத்திய அஞ்சல் கோட்டம், கடந்த ஆண்டு துரித அஞ்சல் மற்றும் பணவிடை சேவை மூலம், 25 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 26 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 30 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி பேச்சு: உலகின் பல பகுதிகளில் பொருளாதார மந்தநிலையும் நெருக்கடியும் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற தீவிர நடவடிக்கைகள் அவசியம். மாறாக, பொருளாதார நெருக்கடி நீடித்தால், அது நாடுகள் இடையே கரன்சி மதிப்பு தொடர்பான மோதலாக உருவெடுக்கும். அது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், போட்டி காரணமாக கரன்சி மதிப்பை குறைப்பதை கை விட்டு, பேச்சு மூலம் மோதலை தவிர்க்க வேண்டும்.

மத்திய அமைச்சர் பல்லம் ராஜு பேட்டி: தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு முன், அனைத்து சாத்திய அம்சங்களையும் மனதில் கொண்டு அதனடிப்படையில் தீர்வு கண்ட பிறகே, முடிவு எடுக்க முடியும். மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கிறது. அதே சமயம், உணர்ச்சிகளின் அடிப்படையில் மாநிலத்தை கூறுபோட முடியாது.மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கராத் பேச்சு: விலைவாசியின் சமீப நிகழ்வாக பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு அளிக்கப்படும் மானியத்தை குறைக்கும் மோசமான முடிவையும் அரசு ஆலோசித்து வருகிறது. பெட்ரோல், விலையை உடனே குறைக்க வேண்டும்.

கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி: தமிழகத்திற்குத் தண்ணீர் தேவை அதிகம் என்பதை அறிவோம். அவர்களுக்குத் தண்ணீர் தர நாங்கள் மறுக்கவில்லை. இது தொடர்பாக, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு முடிவுக்கு வர தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர், கேரளத்திற்கு பாதுகாப்பு என்பதே எங்களின் கொள்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை