அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை: மன்னார்குடி அரசு
மருத்துவமனையில், போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால், மருத்துவ
பணியாளர்களும், பொதுமக்களும் இன்னலுக்கு ஆளானதாக வரும் செய்தி, கவலை
அளிக்கிறது. போதை பொருள் புழக்கம் குறித்த என் தொடர் எச்சரிக்கைகளுக்கு
செவிமடுக்காமல், தி.மு.க., அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும்,
பொதுமக்களுக்கான இடையூறுகளும். கொரோனா உச்சத்தில் தாண்டவமாடிய போது, 'டாஸ்மாக்' கடைகளை திறந்த இவர், இப்போதைய அரசை எந்த அடிப்படையில குற்றம் சாட்டுறாரு? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மா, பப்பாளி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும். மழை, வெள்ளத்துக்கே திக்கி திணறி இப்ப தான் மத்திய அரசு கொஞ்சூண்டு நிவாரணம் குடுத்திருக்கு... இப்ப, வறட்சி நிவாரணம் கேட்டா மாநில அரசு தருமா?தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'பா.ஜ.,வும், பிஜு ஜனதா தளமும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துள்ளனர்' என, ராகுல் கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை; கள்ள உறவு கொள்வது தான் தவறு. கேரளாவில் முட்டி மோதிக் கொள்ளும் காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும்,தமிழகத்தில் கள்ள உறவு வைத்துள்ளதே ஏன்? அந்த கட்சிகள் எல்லாம் வெளிப்படையாக தானே கூட்டணி வைத்துள்ளன... யாருக்கும் தெரியாமல் இருந்தால் தான், அது கள்ள உறவு கணக்குல வரும்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமி ஒற்றை தலைமைக்கு ஒவ்வாத தலைமை என்பதை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னறிவிப்பு செய்தது. இப்போது நடந்து முடிந்திருக்கும் லோக்சபா பொதுத் தேர்தல், அதை நாடறியும் வகையில் முழு அறிவிப்பு செய்ய காத்திருக்கிறது.ராமநாதபுரத்தில் பலாப்பழம் பழுக்காமல் போனால், இவரது தலைவரது நிலையும் கேள்விக் குறியாகுமே!