முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: ஹிந்துக்களின்
உரிமைகளை போற்றியவர் ஜெயலலிதா. ரம்ஜான் நோன்பு காலத்தில் மசூதிகளுக்கு
அரிசி வழங்கியதோடு, முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் புனித
பயணங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, உலமாக்களுக்கு ஓய்வூதியம் அளித்து, தன்
நிர்வாகத்தால் மதத்தை கொண்டு மக்களை வெறியூட்டாத ஒரு நெறி கொண்ட அரசியலை
நடத்தினார் என்பதே உண்மை.ஜெயலலிதா சமகால தலைவராக இருந்து மறைந்தவர் என்பதால், யார், என்ன சொன்னாலும் தற்போதைய தலைமுறைக்கு அவரை பற்றி நன்கு தெரியும்! தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவை குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்ட அப்துல் நாசர் மதானி என்ற பயங்கரவாதியை சந்தித்து ஆதரவளித்த, ராஜிவ் கொலைக்கு தண்டனை பெற்ற பேரறிவாளனை வரவேற்று ஆதரவளித்த திருமாவளவன், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வது தான் உண்மையான பயங்கரவாதம்.'அடங்க மறு; அத்துமீறு' என போதனை பண்றது எல்லாம் பயங்கரவாதம் ஆகாதா...? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: வருவாய்த் துறை சார்பில் வழங்கப்படும் ஜாதி, வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது, 16 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என, வருவாய்த்துறை பணியாளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை அரசு உடனே கொண்டு வர வேண்டும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், சேவை வழங்காத அதிகாரிக்கு தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் தேவை.கேட்ட சலுகைகளையும் தராமல், இப்படி எல்லாம் சட்டம் போட்டா அரசு ஊழியர்கள் பரம எதிரிகள் ஆகிடுவாங்கன்னு அரசுக்கு தெரியாதா?தமிழக பா.ஜ., ஊடக பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: புதிதாக உருவாகும் மோடி 3.0 அரசு என்பது, நவீன விஞ்ஞானத்துடன், மிகவும் வலிமையான வழிகாட்டுதலை, நெறிமுறைகளை உள்ளடக்கியதாக அமையும். அரசின் தலையாய கடமையாக, அவர் செயல்படுத்த விரும்பும், இரண்டு ஒப்பற்ற செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்று நான் நினைப்பது, புதிய வேலை வாய்ப்பு கொள்கை, புதிய விவசாய கொள்கை.விலைவாசி பற்றி எல்லாம் நினைப்பதே இல்லையா... அது தாங்க இப்ப அடிப்படை பிரச்னையே!