தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: தேர்தலில்
அதிக இடங்களில் வென்ற பா.ஜ.,வை பார்த்து குறைவான இடங்களை வென்ற காங்கிரஸ்
குறை கூறிக் கொண்டிருப்பது அவர்களின் அறியாமையை காட்டுகிறது.என்ன தான் சொன்னாலும், நாயுடுகாரு, நிதீஷ் பய்யா தயவுல தானே இவங்க அஞ்சு வருஷ ஆட்சியை ஓட்டணும்!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'இன்னமும் மக்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சந்தேகிக்க தான் செய்கின்றனர்' என, சிதம்பரம் கூறியுள்ளார். இன்னமும் மக்கள் காங்கிரசை நிராகரிக்கத்தான் செய்கின்றனர். அப்படி இருக்கையில், எப்படி காங்கிரஸ் 99 இடங்களை பெற்றது என்பதால் சந்தேகிக்கின்றனரோ?அதானே... ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, 'டவுட்' என்றால், தி.மு.க., - காங்., கூட்டணி 40க்கு 40 ஜெயித்தது எப்படியாம்?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தேசத்தின் பெரும்பான்மை நிலைக்கு மாறான முடிவை, தேர்தல்களில் தொடர்ந்து தமிழகம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக நாட்டை ஆளும் கட்சிக்கு, பிரதிநிதித்துவமே தராத அளவுக்கு, வெறுப்பு அரசியலை முன்னெடுப்பது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. தமிழகம் மட்டும் பயன்பாட்டுக்கு உதவாத தீர்ப்புகளால் தனித்து நிற்பது என்றால், இது பெரியார் மண், திராவிட மண் என்று பெருமை பேச உதவுமே தவிர, வெளிநடப்பு கட்சிகளின் வெற்றிகளால், தமிழகத்துக்கு ஆகப்போவது ஏதுமில்லை.'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அண்ணாதுரை தத்துவத்தை இவர் ஏத்துக்கலையா?தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை: தி.மு.க., எதிர்ப்பால் உருவான அ.தி.மு.க., இன்று தி.மு.க.,வின் வெற்றிக்கு உதவும் வகையில் நடந்து கொள்கிறது. இன்றைய அ.தி.மு.க., தலைவர்கள், தி.மு.க.,வின் சதி வலையில் விழுந்து விட்டனர். அ.தி.மு.க., வெல்ல வேண்டும் என்பதை விட, கட்சி தங்களிடம் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். இது தி.மு.க.,வுக்கு சாதகமாகி உள்ளது. தி.மு.க., வெற்றிக்கு மறைமுகமாக உதவுபவர்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க தகுதியும் இல்லை; உரிமையும் இல்லை.'எங்க இரண்டு கட்சிக்கு தான் தமிழகத்தை பட்டா போட்டு கொடுத்திருக்கு' என்பது மாதிரி தான் திராவிட கட்சிகளின் செயல்பாடுகள் இருக்குது!