விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலர் வன்னியரசு பேட்டி: தமிழகத்தில்
பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் கோரிக்கை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பின் பூரண மதுவிலக்கு அமல்படுத்த
வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். தி.மு.க., கூட்டணியில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருந்தாலும், மக்கள்
பிரச்னைகளுக்கும், அவர்கள் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் குரல்
கொடுக்கிறோம். இதே கள்ளச்சாராய மரணங்கள் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்திருந்தால் சிறுத்தைகள் இந்நேரம் சீறி இருப்பரே... இப்ப, அப்படியா இருக்கீங்க? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'நீட்' தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதல், அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதை, ஏழு ஆண்டுகளில் போக்க முடியவில்லை. நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.கூட்டணி ஆதரவில் தான் இம்முறை பா.ஜ., ஆட்சி அமைந்திருக்கு... பா.ம.க., ஒரு இடத்துல ஜெயிச்சிருந்தா கூட உங்க கோரிக்கையை காது கொடுத்து கேட்டிருப்பாங்க... இப்ப ஒண்ணும் எடுபடாதே!அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு: தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. எதிர்க்கட்சி தலைவர் சட்டசபையில் கூறியும், தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளை வாரி கொடுத்த மக்களுக்கு, தி.மு.க., இன்று கொடூர கள்ளச்சாராய மரணத்தை பரிசாக வழங்கியிருக்கிறது.'தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டீங்களே... உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்'னு மக்களுக்கு சாபம் கொடுக்கிற மாதிரி இருக்கே!இந்திய கம்யூ., மாநிலச்செயலர் முத்தரசன் பேட்டி: கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க முடியாது. மிகவும் கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற நிகழ்வு தொடர்வது நல்லதல்ல. உள்ளூர் போலீசார் பணத்துக்காக சாராயம் காய்ச்ச அனுமதிக்கின்றனர். போலீஸ் துறை, வருவாய் துறை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகியவற்றில் உள்ள கருப்பு ஆடுகளை களைய, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். இவ்வளவு ஆவேசமாவா கண்டனம் தெரிவிப்பீங்க... பார்த்து முதல்வர் எதுவும் கோபிச்சிக்க போறாரு...