த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு
எதிர்பார்த்த நிதி ஒதுக்கவில்லை என்றால், அதை தமிழக முதல்வர் நேரடியாக
பிரதமரிடமோ, மத்திய நிதி அமைச்சரிடமோ, நிதி ஆயோக் கூட்டத்தில்
வலியுறுத்துவது கடமை. அரசியல் காரணத்திற்காக, முதல்வர், மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்த நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்ப்பது ஓட்டளித்த மக்களை
புறக்கணிப்பதற்கு சமம். பட்ஜெட்லயே எதையும் தராதவங்க, நிதி ஆயோக்கில் கேட்டால் மட்டும் தந்துடுவாங்களா என்ன?தமிழக காங்., பொதுச் செயலர் கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை: 'லோக்சபா தேர்தலில், தமிழக பா.ஜ., 11.24 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டது' என, இந்த சதவீதத்தை சுட்டிக்காட்டியே அண்ணாமலையும் பேசி வருகிறார். பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட 11 சதவீத மக்களையும், பா.ஜ., என்ன அளவுகோலில் அணுகியுள்ளது என்பதை பாராமுகம் பட்ஜெட் நன்றாகவே உணர்த்தியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட தமிழகத்தில் தான், பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட மக்களும் வாழ்கின்றனர் என்பதை பா.ஜ., டில்லி மேலிடம் உணரவில்லை.மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்தே, பா.ஜ.,வின் ஓட்டு வங்கிக்கு வேட்டு வச்சிடுவாங்க போலிருக்குதே!இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது அறிக்கை: இன்று, நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை விகிதம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமாக உள்ளது. இதை சமன்படுத்தும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்பதை இந்த பட்ஜெட் உணர்த்துகிறது. தமிழகத்தை புறக்கணித்துள்ள பட்ஜெட் நடுநிலையான மக்களுக்கானதாக இல்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரராகவும், ஏழைகளை மேலும் ஏழ்மையாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.காங்., ஆட்சியிலும் இதே குற்றச்சாட்டை தான் பலரும் வச்சாங்க... ஆட்சிகள் மாறியும், காட்சிகள் மாறலை!தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: மத்திய பட்ஜெட்டில், ஒரு சில மாநிலங்கள் நீங்கலாக, பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. இதை கண்டிக்கும் வகையில், 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். 'தேர்தல் முடிந்து விட்டது. இனி நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும்' என பிரதமர் கூறினார். ஆனால், மத்திய பட்ஜெட், அவர்கள் ஆட்சியை காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது.இந்தியாவை காப்பாற்ற தான், 'இண்டியா' கூட்டணி இருக்கேன்னு பா.ஜ.,வினர் நினைச்சுட்டாங்களோ?