உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர், வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ., அறிக்கை: பவுர்ணமி தினத்தன்று, திருச்செந்துார் கடலுக்கு செய்யப்படும் ஆரத்தி வழிபாட்டையும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தையும் காவல் துறை, அறநிலைய துறை தடுத்துள்ளனர். பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் மதச்சார்பற்ற அரசு தலையிடுவது, நம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.திராவிட மாடல் ஆட்சியாளர்களை திருப்திபடுத்த, அதிகாரிகள் இப்படி எல்லாம் செய்யணும்னு, ரூம் போட்டு யோசிப்பாங்களோ?தமிழக, காங்., செயற்குழு உறுப்பினர், எஸ்.டி.நெடுஞ்செழியன் அறிக்கை: மாநில உரிமைகள் என்ற போர்வையில் ஜாதி, மத, மொழி ரீதியாக நாட்டை காங்கிரஸ் துண்டாடி வருகிறது என்றும், ராகுல் வரம்பு மீறி பேசுகிறார் எனவும், தமிழக, பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை என்ற விரக்தியில், தமிழக, பா.ஜ.,வினரின் விமர்சனம் தான் வரம்பு மீறி செல்கிறது. தொடர்ந்து, மூணாவது தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில் ராகுல் பேசுறார்னு, பா.ஜ.,வினர் சொல்வாங்களே!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் உள்ள, 40,000 பட்டதாரி ஆசிரியர்கள், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, 410 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அவர்களுக்கு மட்டுமின்றி, 2013ம் ஆண்டு ஆசிரி யர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், தமிழக அரசு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.இருக்கிற ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே, 'கஜானா'வில் காசில்லை... புதிய நியமனங்கள் எல்லாம் நிச்சயம் நடக்காது!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மத்திய அரசின், 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் பலன்கள் கிடைக்க, தேசிய கல்வி கொள்கையின் ஓர் அங்கமான, 'பி.எம்.ஸ்ரீ.,' பள்ளிகள் திட்டத்தில் சேருவதை தவிர வேறு வழியில்லை என கருதி, அத்திட்டத்தில் சேர, தி.மு.க., அரசு விருப்பம் தெரிவித்திருக்கிறது. மின் வாரியத்தின் நலன் கருதி, சில நிபந்தனைகளோடு, 'உதய்' திட்டத்தில் கையெழுத்திட்ட, அ.தி.மு.க., அரசை குற்றம்சாட்டும், தி.மு.க., அரசுக்கு, 'மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா' என்ற பழமொழி மிகவும் பொருந்தும்.விடுங்க... ஒரு வேளை நாளைக்கு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீங்க அப்ப சுட்டிக்காட்ட ஏதாச்சும் வேணுமே... இதை வச்சிக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி