பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஏற்கனவே ஆபத்து ஏற்பட்ட போது, அதுகுறித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை, அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து, அதை பாதுகாத்தவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மீண்டும், 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, முதல்வராக இருக்கும் ஜெயலலிதா, இட ஒதுக்கீட்டு பாதுகாப்பிற்காக, சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து வருகிறது. தமிழக மீனவர்களை சுடுவது என்பது இலங்கை கடற்படைக்கு பொழுதுபோக்காகி விட்டது. மத்திய அரசு இதை தடுக்க தவறிவிட்டது.
பா.ஜ., மூத்த தலைவர் உமாபாரதி பேட்டி: கங்கை நதி மிகவும் மாசுபட்டு மோசமாகி வருகிறது. இந்த புனித நதியின் கலாசார, சமூக பின்னணியை கருத்தில் கொண்டு இதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. இந்த விஷயத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கங்கையை பாதுகாக்க அனைத்து கட்சியினரும், பொது மக்களும் இணைந்து செயல்பட முன் வர வேண்டும்.
இ.கம்யூ., பொதுச் செயலர் பரதன் பேச்சு : ஊழலுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் எத்தனை முறை பேசி உள்ளனர்... ஆனால், அவர்கள் பேசிய மறுநாளே யாராவது ஒரு மத்திய அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி பதவி விலகுகிறார். அடுத்ததாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் வசந்தி தேவி பேச்சு: தமிழகத்தில் கல்வி எப்போதும், விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. ஆனால், இம்முறையோ மாநிலத்தின் கல்வித் திட்டமே ஸ்தம்பித்து இருப்பது வேதனையாக உள்ளது. 2004 - 2005ம் கல்வியாண்டில் பயன்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை அரசு செயல்படுத்த இருப்பது ஏற்புடையதல்ல. மேலும், உண்மையான கல்வியாளர்களை கொண்டு சமச்சீர் கல்வி குறித்த நிபுணர் குழுவை மாற்றியமைக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேட்டி: காங்கிரஸ் தலைவர் சோனியா, அரசியல் ஞானம் மிகுந்தவர். தலித் சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்புகளையும், பதவிகளையும் வழங்க சோனியாவால் மட்டுமே முடியும்.