உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மன உறுதியிருந்தால் யாரும் பெரிதாக சாதிக்க முடியும்!

மன உறுதியிருந்தால் யாரும் பெரிதாக சாதிக்க முடியும்!

திருவள்ளூர் மாவட்டம், கரலாபாக்கத்தில் பால் பிசினசில், மாதம், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் கல்பனா: நான் பிறந்து வளர்ந்தது திருவள்ளூர் மாவட்டம், மேட்டுத் தும்பூர் கிராமம். விவசாய குடும்பம் என்பதால் ரொம்ப சிரமப்பட்டு தான் எம்.பி.ஏ., படிச்சேன். திருமணத்திற்கு பின், கணவரோட வேலை காரணமாக சென்னை தரமணியில் செட்டில் ஆனோம். என்னோட குழந்தைக்கு 2 வயதானபோது மாட்டுப்பால் கொடுக்க நினைச்சேன்.ஆனால், எங்கள் ஏரியாவில் கிடைத்த பால் திருப்தியாக இல்லை. அதனால், எங்க சித்தப்பா தினமும் கரலாபாக்கத்தில் இருந்து தரமணிக்கு, 5 லிட்டர் பால் எடுத்துட்டு வருவாரு.வீட்டு உபயோகத்துக்கு போக மிதம் இருக்குற பாலை அக்கம் பக்கத்தில் தெரிந்தவங்களுக்கு கொடுத்தோம். பாலோட தரம் பிடித்திருந்ததால், பலர் எங்களுக்கும் வேண்டும் என கேட்டனர். இதனால், இந்த தொழிலில் இறங்கினோம். நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் உள்ளிட்ட அனைத்து வகை மாடுகளின் பாலையும் விவசாயிகளிடம் இருந்து பெறுகிறோம். பசும்பால், எருமைப்பால் என, இரு வகையான பாலையும் பயன்படுத்தி பிசினஸ் செய்கிறோம். துவக்கத்தில், 20 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்பட்டது. கடன் கேட்ட இடங்களில், 'நீங்க இரண்டு ஆண்டுகள் இந்த இண்டஸ்ட்ரியில் நல்லா காலுான்றுங்க; அதுக்கப்புறம் கடன் தருவதை பத்தி யோசிக்கிறோம்'னு சொன்னாங்க.அதனால், எங்ககிட்ட இருந்த நகைகளை விற்றும், தெரிஞ்சவங்ககிட்ட கடன் வாங்கியும் சின்னதா ஒரு பிளான்ட் போட்டோம். பாலை விவசாயிகள்கிட்ட இருந்து சேகரிக்கிறதுக்கு தனியாக இரண்டு சேகரிப்பு மையம் துவங்கினோம்.எங்க பால் பிராண்டுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசித்தபோது, உழவு தானே எல்லாத்துக்கும் அடித்தளமாக இருக்குன்னு, 'உழவர் மண்' என்ற பெயரை வைத்தோம்.பாக்கெட்டுகளில் டெலிவரி செய்ய துவங்கினோம். பிரபலமான பிராண்டாக இருந்தால் தான் மக்கள் வாங்குவாங்க. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தி மார்க்கெட் பிடிக்க, நாங்களே நேரில் சென்று வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வோம். பீச், பார்க் என, 'ஸ்டால்' போட்டு எங்கள் பிராண்டை மக்களிடம் அறிமுகப்படுத்தினோம்.அடுத்து டீலர்ஸ் இல்லாமல் நேரடியா, 'கஸ்டமர்ஸ்' வாங்குற மாதிரி, 'ஆன்லைன் அப்ளிகேஷன்' அறிமுகப்படுத்த போகிறோம்.பிளான்டை புதுப்பித்து, இன்னும் விரிவு செய்யும் முயற்சியிலும் இருக்கோம். ஒரு நாளைக்கு, 500 லிட்டர் பால் விற்பனை செய்து, மாதம், 5 - -6 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்க முடிகிறது. மன உறுதியிருந்தால், யார் வேண்டுமானாலும் இதை விட பெரிதாக சாதிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை