கணவர் தந்த ஊக்கத்தால் தொடர்ந்து பயணிக்கிறேன்!
தமிழ் சினிமாவில் கடந்த 1970களில், குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய பேபி இந்திரா:என் 3 வயதில், எதேச்சையாக மலையாள படம் ஒன்றில் நடித்தேன். அடுத்தடுத்து பல மொழிகளிலும் வாய்ப்புகள் வந்தன. ஒரு படத்தில் நடிக்கும் போது, அதன் இயக்குனர், என் அப்பாவிடம், 'சினிமாவில் நடிக்கிறதுக்கான திறமை உங்கள் பொண்ணுக்கு இல்லை. பிள்ளையை படிக்க விடுங்க' என்று கூறினார்.உடனே எங்கப்பா, 'என் மகளோட திறமை என்னன்னு தெரியும். அடுத்த ஒரு வருஷத்துல, இந்தியாவின் பிரபலமான 'சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா' மகளை மாத்திக் காட்டுறேன்' என, சபதமிட்டார்.என் 4 வயதிற்குள்ளேயே ஆறு மொழிகளுடன், தமிழகத்தின் வட்டார வழக்கு மொழிகள் பலவற்றையும் கற்று கொடுத்தார். டான்ஸ், மியூசிக், சைக்கிளிங் என பல பயிற்சிகளையும் எடுத்துக்க வெச்சார். விபரம் புரியவில்லை என்றாலும், எனக்கு நானே டப்பிங் பேசினேன்.எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் பல படங்களில் நடித்துள்ளேன். கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளேன். ஒரு ஆண்டில் மட்டும் பல மொழிகளிலும் சேர்த்து, 30 படங்கள் வரை நடித்துள்ளேன். எங்கப்பா தன் சபதத்தில் ஜெயித்தார்.நடிப்பு வரவில்லை என்று கூறிய அந்த இயக்குனர் வீடு தேடி வந்து, 'உங்க பொண்ணு விஷயத்தில் நான் தப்பா, 'ஜட்ஜ்' பண்ணிட்டேன்' என வருந்தினார். பின், அவர் படத்திலும் நடித்தேன்.நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுற நிகழ்ச்சி, 1974ல் கோவையில் நடந்தது. சிவாஜி அங்கிளுக்கு ரசிகர்கள் சார்பா, 20 சவரன் தங்க மெடலை அணிவித்தாங்க. அதை ஏலம் விட்டு, அந்த பணத்தை நடிகர் சங்கத்துக்கு கொடுக்க முன்வந்தார் சிவாஜி அங்கிள். சின்னப்பா தேவர் அதை ஏலமெடுத்தார். அந்த மெடலை எம்.ஜி.ஆர்., சிவாஜி, சின்னப்பா தேவர் மூன்று பேரும் சேர்ந்து, எனக்கு பரிசா அணிவிச்சாங்க. இப்படியான பல்வேறு பொக்கிஷ தருணங்கள் எனக்கு கிடைத்தன.இப்படி 3 முதல் 18 வயது வரை, 250 படங்கள் இடைவிடாமல் நடித்தேன். அதன்பின் திருமணம், குடும்பம் என தனிப்பட்ட வாழ்க்கைக்குள் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். என் கணவரான ஸ்ரீதரும் தமிழ் சினிமாவில் பிரபலமான குழந்தை நட்சத்திரம் தான். சீரியல் ஒன்றில் சேர்ந்து நடித்த போது இருவீட்டாரின் நட்பு, சம்பந்தம் பேசும் அளவுக்கு நெருக்கமாகியுள்ளது.திருமணத்துக்கு பின் நானும், கணவரும் சேர்ந்து கட்டுமான நிறுவனத்தை துவங்கினோம். 2013ல் அவர் மாரடைப்பில் இறந்து விட்டார். அவர் கொடுத்த ஊக்கத்தாலும், தைரியத்தாலும் தான் தொடர்ந்து நம்பிக்கையுடன் பயணித்து கொண்டிருக்கிறேன்.