கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதி யில், சக திருநங்கையருடன் இணைந்து, கால்நடை பண்ணை நடத்தி வரும் திருநங்கை ரதி:எங்கள் வீடு, விவசாய குடும்பம். நிறைய ஆடு, மாடு செல்லப் பிராணிங்க இருக்கும். ஆனால், நான் திருநங்கை என தெரிந்ததும் வீட்டில் யாரும் என்னை ஏற்கவில்லை. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன்.திருநங்கையாகவே வாழ்க்கையை துவங்கினேன். கடை வசூலுக்கு போனேன். விலங்குகளை பராமரிக்க தெரியும் என்பதால், அதை சுயதொழிலாக எடுக்க நினைத்தேன். அப்படி, என் சக திருநங்கை தோழியரையும் சேர்த்து உருவானது தான், இந்த பண்ணை. பொதுவாக, திருநங்கையருக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டாங்க. அப்படியே கொடுத்தாலும், 2,000 ரூபாய் வீட்டை, 4,000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுவாங்க. இந்த சூழ்நிலையில் தான், என் கையில் இருந்த சேமிப்பை போட்டு, ஒரு இடத்தை வாங்க நினைத்தேன். தென்னிந்திய திருநங்கைகள் நலக் கூட்டமைப்பின் கோவை பகுதி தலைவர் சோனி நாயக்கும், துணை தலைவர் சுபிக்சா நாயக்கும், எல்லா உதவிகளும் செஞ்சாங்க. என்கூட சில திருநங்கையரும் சேர்ந்து பலம் கொடுத்தாங்க. கடந்த 2016-ல், இந்த பண்ணையை துவங்கினோம். துவக்கத்தில், ஒரு ஆடு, ஒரு மாடு தான் வாங்கினோம். அதில் வந்த வருமானத்தை வைத்து அடுத்து அடுத்து வாங்கினோம். நிறைய உழைச்சோம்; படிப்படியாக முன்னேறினோம்.இன்று சொந்தமாக, 15 ஆடு, 20 மாடு இருக்கு. இங்கு, 20 திருநங்கையர் இருக்கோம். வரும் வருமானத்தை அனைவருமாக பகிர்ந்து கொள்கிறோம். பண்ணையில், இரண்டு பேருக்கு வேலையும் கொடுத்திருக்கோம். இந்த வேலைகளுடன், கேட்டரிங் வேலைகளும் செய்து வருகிறோம்.பால் வியாபாரம், மாடுகளோட சாணத்தை வயலுக்கு உரமாக விற்பது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி விற்பது என, இதன் வாயிலாகவும் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஜெர்மன் ஷெப்பர்ட், டால்மேஷன், ராட்வைலர், செயின்ட் பெர்னால்ட், பக், புள்ளிகுட்டா, சிப்பிப்பாறை உள்ளிட்ட நாய் வகைகளையும் வளர்க்கிறோம்.இவற்றை இனப்பெருக்கம் செய்து குட்டிகளை விற்பதன் வாயிலாகவும் வருமானம் ஈட்டுகிறோம். சமூகம் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை; இப்போது, இந்த விலங்குகள் தான் எங்களுக்கு சாப்பாடு போடுதுங்க. இப்போது எங்கள் வீட்டில் அம்மா, அப்பா உடன் பிறந்தவங்க எல்லாரும் என்னை ஏத்துக்கிட்டாங்க. இன்னும் பல திருநங்கையருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கணும்.திருநங்கையர் குறித்தான பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. அவர்களுக்கு கை கொடுத்து உயர்த்திவிட, கூட்டு முயற்சியோடு அயராது உழைத்து வருகிறேன். இந்த பகுதியின் திருநங்கையர் நலச்சங்க தலைவராக உள்ளேன்.