உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இந்தியர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம்!

இந்தியர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 'திபெத்தியன்' மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும், கல்சங் டோல்மா: மைசூரில் வசித்த எங்கள் மக்களின் ஒரு பிரிவினர், 1975-ல் ஊட்டிக்கு புலம்பெயர்ந்தாங்க. அவர்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்காக பிளாட்பாரத்தில் கடை நடத்தினர். அப்போது, நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த லீனா நாயர் மேடம் தான், எங்கள் நலனுக்காக, இந்த மார்க்கெட் அமைப்பதற்கான இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. இங்கு, ஸ்வெட்டர், ஷால், ஸ்டோல், ஜாக்கெட், பிளாங்கெட் உட்பட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான கம்பளி வகை ஆடைகளை விற்பனை செய்கிறோம். காலை முதல் இரவு வரைக்கும் இந்த மார்க்கெட் செயல்படும். விடுமுறை நாட்களிலும், கோடைக்கால சீசன் நேரத்திலும் வியாபாரம் அதிகமாக நடக்கும். ஒவ்வொரு கடையிலும் கூடக்குறைய என, வியாபாரம் இருக்கும்; ஆனால், எங்களுக்குள் எந்த ஏற்றத்தாழ்வும் இருக்காது. இந்த மார்க்கெட்டுக்கு பல மாநிலத்தினரும், 'ஷாப்பிங்' செய்ய வருவர். அதனால், வியாபாரத்துக்காக தமிழ் உட்பட பல மொழிகளையும் கற்றுக் கொண்டோம்.குடும்பத் தலைவர்கள், வட மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்கான ஆடைகளை வாங்கி வருகின்றனர். அவற்றை வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுவது, திபெத்தியக் குடும்பத் தலைவியரின் பொறுப்பு. திபெத்தியர்களில், வேலைக்கு போகாத கணவன்மார்கள், வீட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வர். சமையல், வீட்டு வேலைகள், பிள்ளைகளை கவனித்துக் கொள்வது என, வீட்டு நிர்வாகத்தை ஆண்கள் தான் பெரும்பாலும் பார்த்துக் கொள்வர்.அப்படியான வீடுகளில், உத்யோகம் பெண்களுக்கானது. விருப்பமுள்ள ஆண்கள், இந்த மார்க்கெட்டில் அவங்கவங்க வீட்டுப் பெண்களுக்கு தொழிலிலும் உதவி செய்வர்.திபெத்திய சமூகத்தில், ஆணும் பெண்ணும் சமம் என்பதை குழந்தை பருவம் முதலே கடைப்பிடிக்கிறோம். கீமா: நல்ல உடல் நிலையுடன் இருக்கும்போது கை நீட்டி உதவி கேட்பதும், பிறரை எதிர்பார்த்து வாழ்வதும் தப்பில்லையா? அதனால் உழைத்து சாப்பிடணும்னு நானும், எங்கள் மக்களும் இங்கு கடை நடத்துகிறோம். கடந்த, 1959ல் நாங்கள் இந்தியா வந்தது முதல் இப்போது வரை இந்திய மக்கள் எங்களுக்கு கொடுக்கிற வரவேற்பும், அன்பும் அளப்பரியது. அகதிகளாக வந்தாலும், நாங்கள் கண்ணியமாகவே வாழ்கிறோம். திபெத்தில் இருந்ததை விட, இங்கு தான் சந்தோஷமாக வாழ்கிறோம். இந்தியர்களுக்கு நாங்கள் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ