பிரபல எழுத்தாளர் சிவசங்கரி: என் 56 ஆண்டு இலக்கிய பயணம். வயது ஆக ஆக ஆன்மிக சிந்தனைகளில் புத்தி செல்ல துவங்கியதும் உடம்பையும், மனதையும் நம் கட்டுப்பாட்டில் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என, கற்றுக் கொண்டேன். நம் உடலுக்கு மூன்று ஆரோக்கியம் தேவைப்படுகிறது... அவை, முதலில் உடல் ஆரோக்கியம்; இரண்டாவது மன ஆரோக்கியம்; மூன்றாவது உணர்வுகளையும், -உணர்ச்சி களையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது. தேவையில்லாமல் கோபப்படுவது, அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக் கொண்டால் போதும்.உடல் ஆரோக்கியத்துக்கு நடப்பேன்; யோகா செய்வேன். எனக்கு தற்போது, 81 வயது முடிந்து விட்டது. இந்த வயதில், 60 வயதுக்காரிக்கு இருக்குற சுறுசுறுப்புடன், நடை, உடை, பாவனை, பேச்சுகளுடன், தெளிவான சிந்தனைகளோடு இருந்தால் போதும் என நினைக்கிறேன்.நமக்கு, 40 வயதாகும்போதே மூன்று தளங்களில் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். நாம் யாரையும் எதிர்பார்த்து நிற்கக் கூடாது. நம் வாழ்க்கையை நாம் வாழணும். யாரையும் சார்ந்து இல்லாமல் வாழ, உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தியானம், யோகா, உடற்பயிற்சிகளை கண்டிப்பாக, 40 வயதிலேயே துவங்க வேண்டும்; அப்போது தான், 60 வயதில் எல்லா விதத்திலும், 'பிட்'டாக இருக்க முடியும்.இதற்கும் 40 வயதிலேயே ஒரு முடிவை எடுக்கணும். பிள்ளைகளின் படிப்பு, வீட்டு செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், 'இது என் முதுமைக்கான செலவு' என, சேமிக்க ஆரம்பிக்க வேண்டும். இது சுயநலம் இல்லை; நம்மை முதுமையில் கவுரவமாக வாழ வைக்கும் விஷயம். உடம்புக்கு முடியலைன்னா அது சொல்றதை நாம கேட்கணும். 'நமக்கு எல்லாம் தெரியும்' என, எந்த நேரத்திலும் நினைக்கக் கூடாது. இப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். இப்படி நம்மை நாமே தட்டிக் கொடுத்து, ஆரோக்கியமாக இருந்தால் நாம் பேசும் பேச்சு, செயல்பாடுகள் என எல்லாவற்றுக்கும் ஓர் அர்த்தம் இருக்கும்; முதுமைக்கும் ஒரு மரியாதை கிடைக்கும்.வீட்டுக்குள் காற்று வருவதற்கு ஜன்னலை திறந்து வைப்பது போல, மனசுக்குள் அழுக்கோ, அழுத்தமோ இருக்கக் கூடாது; சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 'நெகட்டிவாக' யோசித்தால் கோபமும், சுய பச்சாதாபமும் வரும்.தேவையே இல்லாமல் நம் நிம்மதியை தொலைத்து விடுவோம். 'பாசிட்டிவ்' சிந்தனைகள் தான் மனதை இளமையாக வெச்சுக்கும்; எந்த வயசுலயும் இயல்பாக வாழ வைக்கும்.