உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடணும்!

இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடணும்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான, சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த சாய் சுதர்சன்: என் தந்தை பரத்வாஜ், தெற்கு ஆசிய போட்டிகளில், இந்திய அணிக்காக தடகளத்தில் பங்கேற்றவர்; தாய் உஷா, தமிழ்நாடு வாலிபால் அணியில் விளையாடியவர்.சிறு வயதில், 'ஸ்பிரின்டிங்' விளையாட்டில் தான் பயிற்சி எடுத்தேன். அப்போது, அப்பா தான் எனக்கு கோச்.ஆனால், பின் என் கவனம் கிரிக்கெட் மேல் விழுந்தது. 4வது படிக்கும்போது டென்னிஸ் பந்தில் எல்லாரும் விளையாடுற மாதிரி தான் நானும் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன். போகப்போக அந்த விளையாட்டு என் வாழ்க்கையோடு ஒரு பகுதியாகவே மாறிடுச்சு. அடுத்து, 8வது படிக்கும்போது, சீரியசாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளத் துவங்கி விட்டேன். இப்போது, அதுவே என் கேரியரா மாறிடுச்சு.'டோர்னமென்ட்' போகணும். அதுக்காக பிராக்டீஸ் செய்யணும் போன்ற காரணங்களால், காலாண்டு, அரையாண்டு தேர்வெல்லாம் எழுத முடியாது. ஆனால், முழு ஆண்டு தேர்வை மட்டும் சூப்பராக எழுதி பாஸ் பண்ணிடுவேன்.நான் ஸ்போர்ட்ஸ்லயே அதிக கவனம் செலுத்தியதால், ஸ்கூல் பாடங்களைக் கூர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிளஸ் 1, பிளஸ் 2 படித்தபோது அக்கவுன்ட்ஸ் படிக்க ஜாலியாக இருக்கும். மற்றபடி எப்பவுமே கிரிக்கெட் தான் பிடிக்கும்.நாம வளர வளர விளையாட்டின் கடினத்தன்மையும் அதிகரித்தபடியே போகும். அதற்கு தகுந்தாற் போல, நம்மை மாற்றிக் கொள்ளணும். ஒவ்வொரு விளையாட்டுமே நமக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும்; அந்தப் பாடத்தை நாம தவறவிடக் கூடாது.அதை நாம் உள்வாங்கி விளையாடும்போது, அடுத்தடுத்த விளையாட்டில் நம்முடைய, 'பெர்பார்மன்சை' அதிகப்படுத்திக் கொள்ள முடியும்; இதை உணர்ந்து, பின்பற்றி வருகிறேன்.என்னைப் பொறுத்தவரை, இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். ஒவ்வொரு விளையாட்டிலும் பெஸ்ட்டை கொடுக்க வேண்டும்; அது தான் என்னோட இலக்கு. எந்த துறையில் ஒருவர் சாதிக்க நினைத்தாலும், அதற்கான முழு உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் யாராக இருந்தாலும், நிச்சயம் அவர்களால் சாதிக்க முடியும்.முன்பு கிரிக்கெட், ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது இன்ஜினியரிங் போல கிரிக்கெட் விளையாடுவதும் ஒரு புரொபஷனாக மாறிவிட்டது; இது ஒரு நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறி. தவிர, கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பலருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

நாங்கள் விளைவிக்கிற கீரைகளுக்கு தனித்துவமான சுவை இருக்கும்!

நடிகர், பல குரல் கலைஞர், வர்ணனையாளர் என கலைத் துறையில் பல முகங்கள் கொண்ட சென்னை, முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த படவா கோபி:எனக்கு விவசாயம்னா ரொம்ப பிடிக்கும். நான் பிறந்து வளர்ந்தது, நகரத்துலங்கிறதால அதற்கான சூழல் அமையவே இல்லை. ஆனால், எப்படியாவது நாமும் விவசாயம் செய்யணும்கிற எண்ணம் தொடர்ந்து இருந்துட்டே இருந்துச்சு. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் குடியேறிட்டோம். இங்கு வந்ததும், முதல் வேலையாக எங்க வீட்டைச் சுற்றி மரங்கள் தான் நட்டேன். பின், மாடி தோட்டம் அமைத்தேன். ஒரு செடி பூத்துக் காய்க்கிறதை பாக்குறதும், ரசாயனம் கலக்காமல் விளைந்திருக்கும் காய்கறிகளை நம் கையால் அறுவடை செய்து சாப்பிடுவதும் பயங்கரமான சந்தோஷத்தைக் கொடுக்கும்; அதை அனுபவிக்கும்போது தான் புரியும்.அது மட்டுமல்ல, தோட்டம் அமைக்கிறதும், தியானம் செய்யுற மாதிரி தான். எவ்வளவு பெரிய மன பாரமாக இருந்தாலும், இங்கே வந்து உட்கார்ந்தால் மனசு லேசாகிடும்.தோட்ட வேலைகளைப் பொறுத்தவரை, எல்லா வேலைகளையும் நானே செஞ்சுடுவேன். ஆனால், அறுவடை மட்டும், பெரும்பாலும் என் தங்கச்சி பசங்களை செய்யச் சொல்வேன். ஏன்னா, அவங்க வீட்ல காய்கறிகளை கடையில் தான் வாங்குறாங்க.காய்கறி எப்படி விளையுது, அதைப் பறிக்கும்போது என்ன உணர்வு ஏற்படுதுனு அவங்களும் தெரிஞ்சுக்கணும்னு நினைப்பேன். அவ்வப்போது மாடியிலேயே அடுப்பு வைத்து, இங்கேயே காய்கறிகளை பறித்து சமைத்து சாப்பிடுவோம்; அது இன்னும் உற்சாகமாக இருக்கும். எனக்கு நீர்க்காய்கறி கள் என்றால் மிகவும் பிடிக்கும். பீர்க்கன், பூசணி, புடலை, முள்ளங்கி, சுரக்காய்ன்னு பல நீர்க்காய்கள் போட்டிருக்கேன்.குண்டுமல்லி, செம்பருத்தி, பாரிஜாதம், நித்ய மல்லின்னு நிறைய பூச்செடிகள் வைத்திருக்கிறோம். அதைப் பறிக்கும்போது, மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். காய்கறிகள், பூச்செடிகள் மட்டு மல்ல, பலவிதமான கீரைகளும் உற்பத்தி செய்கிறோம்.எங்க மாடித் தோட்டத்தில் கீரைகள் வளர்க்க துவங்கிய பின்தான், ஒவ்வொரு கீரைக்கும் சுவையில் வித்தியாசம் இருக்கும் என்பதே தெரிந்தது. கடையில் வாங்குற கீரைக்கும், இங்கு நாங்க விளைவிக்கிற கீரைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு சாப்பிட்டால், இது என்ன கீரைன்னு வித்தியாசம் கண்டுபிடிக்கிற அளவுக்கு நாம் விளைவிக்கிற கீரையோட சுவை தனித்துவமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

murthy c k
பிப் 07, 2024 10:16

வாழ்க வளமுடன் கோபி அவர்களே, உங்களை பார்த்து நிறைய பேர் மாடி தோட்டம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன்


g.s,rajan
பிப் 04, 2024 22:15

தமிழக இளம் கிரிக்கெட் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ......


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை