திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துார் அருகே, வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த, இயற்கை விவசாயி கார்த்திகேயன்:டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும், மானாவாரி பூமியில் பெரும் சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடனும், அயராத உழைப்புடனும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். எங்களோட வீடு, ஆடு, மாடு, கோழிகளுக்கான கொட்டகை, கிணறு, தானியங்கள் காய வைப்பதற்கான களம் இதெல்லாம் சேர்த்து, 50 சென்ட் போக, மீதி 2.5 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாத காரணத்தால், உடல் உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவத்திற்கு அதிகம் செலவு செய்கிறோம். அதுபோன்று இருக்கக் கூடாது என்று நானும், மனைவியும் முடிவு செய்தோம்.கடந்த, 2019ல் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டோம். அதன்பின், மஹாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட, சிவப்பு நிற நாட்டு மக்காச்சோள விதைகளை வாங்கி, 40 சென்டில் பயிர் செய்ததில், 300 கிலோ மகசூல் கிடைத்தது. மறுசாகுபடிக்கு, 50 கிலோ விதைகளை எடுத்து வைத்து, மீதியை தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரள மாநில விவசாயிகளுக்கும் கொடுத்தேன். சத்தான கீரைகளை இயற்கை முறையில், மூன்று ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறேன். 'நல்லா சுவையா இருக்கு' என்று, பலரும் கீரை வாங்க ஆரம்பித்தனர்; கீரை விற்பனை வாயிலாக கணிசமான வருமானம் கிடைக்கிறது.மேலும், தேக்கு, தென்னை, நாட்டு கொய்யா, மகோகனி, மாமரம், முள்சீத்தா, இலந்தை, நெல்லி, முந்திரி, பப்பாளி, சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகள் இருக்கின்றன; இன்னும் சில ஆண்டுகளில் வீட்டிற்கு தேவையான பழங்கள், எங்கள் பண்ணையிலேயே கிடைத்து விடும். கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், புடலை, பீர்க்கன், அவரை உள்ளிட்ட காய்கறிகளும், வெற்றிலை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்வோம். கார்த்திகை பட்டத்தில், உளுந்து, பச்சைப் பயறு, காராமணி, துவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வோம். என் பண்ணையில், மூன்று நாட்டு மாடுகள், இரண்டு ஆடுகள், 160 நாட்டு கோழிகள் வளர்த்து வருகிறேன். இதனால், இயற்கை விவசாயத்திற்கு தேவையான உரம் கிடைப்பதோடு, எங்கள் குடும்பத்திற்கு தேவையான பால், முட்டை, இறைச்சியும் கிடைக்கிறது. தற்போது, நான் எதையுமே வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. தற்சார்பு வாழ்க்கை பயணத்தில் வெற்றிகரமாகவும், நிம்மதியாகவும் எங்கள் குடும்பம் பயணிக்கிறது. தொடர்புக்கு: 95005 21247