'வாய்' திறக்காத ஸ்டாலின்... தொண்டர்கள், 'அப்செட்!' ''சுற்றுலாத் துறை அதிகாரி, சுத்திச் சுத்தி வசூலைப் போடறாராம் ஓய்...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊர்ல வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''மதுரையில இருக்கற ஒரு சுற்றுலாத் துறை அதிகாரி, அஞ்சு வருஷத்துக்கும் மேலா, தொடர்ந்து அந்தப் பதவியிலேயே இருக்கார் ஓய்... கடந்த ஆட்சியில, 'அ'னாவுக்கு வேண்டப்பட்டவர்னு சொல்லி, மாநகராட்சி நிதி, மீனாட்சியம்மன் கோவில் நிதியில ஏகப்பட்டதை ஒதுக்கிட்டார்...
''பெரிய பெரிய ஓட்டல்களுக்கு, 'பார்' உரிமம் வழங்கறதுல, 'கட்டிங்' வாங்கிடறார்... இவரோட நடவடிக்கைகள் தெரிஞ்ச மேலதிகாரி, மூணு மாவட்டத்துக்கு கொடுத்திருந்த அதிகாரத்தைப் பிடுங்கி, ஒரே மாவட்டத்தோட சுருக்கிட்டார்... ஆனாலும், அங்கங்க ஆள் பிடிச்சு, தன் நடவடிக்கையைத் தொடர்ந்துண்டிருக்கார் ஓய்...'' என்றவர்,''இத்தனையையும் பண்றவர், தர்மராஜாவா இருக்க முடியும்...'' என சலித்துக் கொண்டே, அந்த விஷயத்தை முடித்தார் குப்பண்ணா.
''பெரிசா எதிர்பார்த்ததுல, ஏமாற்றம் தான் மிச்சமாம்ங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் அந்தோணிசாமி.
''புரியற மாதிரி சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''சென்னை எண்ணூர்ல, ரெண்டு நாளைக்கு முன், ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வச்சாருங்க... ஆவேசமா பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்துவார்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க... ஆனா, ஆளுங்கட்சியைப்பத்தி அவர் வாயே திறக்கலை...
இத்தனைக்கும், பிரசாரத்துக்கு முதல் நாள், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாமியை கைது செய்தாங்க... அதைக் கண்டிச்சு கூட அவர் ஒரு வார்த்தை பேசலை...
''மேயர் சுப்ரமணியன் நல்லா வேலை செய்றவரு... அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கனு ஒப்புக்கு பேசிட்டு போயிட்டாருங்க... முதல் கூட்டத்திலேயே ஸ்டாலின் ஏமாத்திட்டதால, உடன் பிறப்புகள் உற்சாகத்தை இழந்துட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''அதிகமா, 'ஆர்டர்' வாங்கணும்னா, அதிகாரியை கவனிக்கணுமாம் ஓய்...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் குப்பண்ணா.
''எந்த துறை விவகாரம்ங்க...'' என விசாரித்தார் அந்தோணிசாமி.
''தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துல, ஒரே குளறுபடி நடந்துண்டு இருக்கு ஓய்... இந்த ஆட்சி வந்ததும், ரெண்டு சேர்மன் மாறி, இப்ப மூணாவது சேர்மன் வந்திருக்கார்... இதனால, பாடப் புத்தகங்கள் அச்சடிக்கறதுல ஒரே குழப்பம்...
''பாடப் புத்தகங்கள் அச்சிட, 'ஆர்டர்' கொடுக்கறதுல, அங்கயிருக்கற ஒரு அதிகாரி, தீவிர வசூல் வேட்டை நடத்திண்டு இருக்கார் ஓய்... அவரை, 'வெயிட்'டா கவனிச்சா, ஆர்டரும் பெரிய அளவுக்கு கிடைக்குமாம்... இல்லைன்னா, வெறும், 20 ஆயிரம், 30 ஆயிரம் பிரதிகளுக்குத் தான் ஆர்டர்...'' என்ற குப்பண்ணா, தமது, 'மொபைலை'ப் பார்த்து,''யாரோ, 'சிங்'குன்னு ஒருத்தர், 'மெசேஜ் அடிச்சிருக்காரு ஓய்...'' எனக் கூறிய படியே புறப்பட, மற்றவர்களும் கிளம்பினர்.