''அரசுக்கு கிராவல் மண் அடிக்கிற ஒப்பந்தம் எடுத்தவர், தனியாருக்கு மண் குடுத்துட்டு இருக்காருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.''பெரம்பலுார் மாவட்டத்துல, நாரணமங்கலம், இரூர், பாடாலுார் ஆகிய கிராமத்துல இருக்குற திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில பாலம் கட்டுறாங்க... இந்த கட்டுமான பணிக்கு, காரை ஊராட்சி, வரகுபாடி ஏரியில இருந்து கிராவல் மண் எடுத்துக்க, 'மாஜி' மத்திய அமைச்சரின் பினாமி ஒருத்தருக்கு, 'பர்மிட்' குடுத்திருக்காங்க...''இவர், வரகுபாடியில எடுக்கிற கிராவல் மண்ணை, அங்க இருக்கிற மூன்றெழுத்து பிரபல டயர் தொழிற்சாலைக்கு விற்பனை பண்றதோட, வெளியிலயும் வித்து காசு பார்க்கிறாருங்க... ''டயர் தொழிற்சாலைக்கு கிராவல் மண் அடிக்கிற டெண்டரை, ஒரு பிரபல நிறுவனம் எடுத்திருந்துச்சுங்க... அந்த நிறுவனத்துடன், 'மாஜி' பேச்சு நடத்தி, தன் பினாமிக்கு கைமாத்தி விட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கிட்டத்தட்ட எட்டு வருஷமா அசைக்க முடியாத சக்தியா இருக்காங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாவட்டத்தில் பிரபலமான கோவில்கள்ல, அறநிலைய துறை அதிகாரியா ஒரு பெண் இருந்தாங்க... எட்டு வருஷத்துக்கும் மேலா இங்கனயே இருக்காங்க வே...''போன அ.தி.மு.க., ஆட்சியில, இவங்களை விழுப்புரம் மாவட்டத்துக்கு மாத்தினாங்க... அப்ப, அமைச்சர் ஒருத்தரின் ஆசியோட மறுபடியும் கோவைக்கே வந்துட்டாங்க வே...''லோக்சபா தேர்தலுக்கு முன்னாடி, சேலம் மாவட்டத்துல பிரபலமான கோவிலுக்கு பதவி உயர்வுடன் இடமாறுதல்ல போனாங்க... ஆனா, இந்த ஆட்சியிலயும் தன் செல்வாக்கை பயன்படுத்தி, சில நாட்கள்லயே கோவைக்கு திரும்பிட்டாங்க... சேலம் பதவியுடன், கோவையில ஏற்கனவே இருந்த கோவில் பொறுப்பையும் கூடுதலா கவனிக்கிறாங்க வே...''இந்த அதிகாரியால நிறைய பயன் பெற்ற, 'மாஜி'யின் உடன்பிறப்பு ஒருத்தர், பேரூர் பச்சாபாளையத்துல இவங்களுக்கு பிரமாண்ட பங்களா கட்டி குடுத்திருக்கார்னு துறை வட்டாரத்துல பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''வேலைக்கே போகாம சம்பளம் வாங்குறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''யார் ஓய் அது...'' என கேட்டார்,குப்பண்ணா.''சென்னையை சேர்ந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருத்தரின் மனைவி, செய்தி மக்கள் தொடர்பு துறையில், பி.ஆர்.ஓ.,வா இருந்தாங்க... தி.மு.க., ஆட்சி வந்ததும், வள்ளுவர் கோட்டம் பி.ஆர்.ஓ.,வா நியமிக்கப்பட்டாங்க பா...''அப்ப, வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிக்காக, பார்வையாளர்களுக்கு தடை போட்டாங்க... அங்க எந்த நிகழ்ச்சிகளும் நடக்கலைங்க... இதனால, வீட்டுல இருந்தபடியே சம்பளம் வாங்குனாங்க...''அடுத்து, உதவி இயக்குனரா பதவி உயர்வு குடுத்து, தலைமை செயலகத்துக்கு அனுப்புனாங்க... அங்கயும் சில நாட்கள் மட்டும் தான் தலையை காட்டுனாங்க... ''கிட்டத்தட்ட ஒரு வருஷமாவே, பணிக்கு வராமலே சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க... 'அவங்களுக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை'ன்னு மற்ற அதிகாரிகள் குமுறிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.