சென்னை:சென்னை, புறநகர் பகுதிகளான பொழிச்சலுார், கவுல்பஜார் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக, 11.37 கோடி ரூபாய் நிதியை, மாவட்ட ஊரக வளர்ச்சி துறைக்கு சி.எம்.டி.ஏ., வழங்கியுள்ளது. சென்னை பெருநகரில், எம்.எல்.ஏ., தொகுதி வாரியாக, கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, கடந்த நிதி ஆண்டில், 36 திட்டங்களுக்கு, 234 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான திட்டப்பணிகளை சி.எம்.டி.ஏ., நேரடியாக 'டெண்டர்' வெளியிட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்கிறது. இந்நிலையில், குறிப்பிட்ட சில பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் ஆலந்துார் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலுார், கவுல்பஜார் பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்க சி.எம்.டி.ஏ., ஒப்புக்கொண்டது. இதற்காக, 11.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அத்தொகையை, சென்னை சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துணை கலெக்டர் அனாமிகா ரமேஷிடம் வழங்கினார்.